Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!
வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து ராகுல் காந்தி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 44 நாள்களாக நடந்து வந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரு வழியாக நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய 7 கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. வரும் ஜூன் 4ஆம் தேதி (நாளை மறுநாள்) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளுக்காக நாடே காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ஏறக்குறைய அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவை வெற்றி பெறும் என கணித்துள்ளது.
பாஜக, கடந்த முறையை விட இந்த முறை அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ABP - C Voter வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், 152 முதல் 183 தொகுதிகள் வரை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது.
INDIA TODAY( Axis MyIndia) வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, 361 முதல் 401 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றி அடையும் என சொல்லப்பட்டுள்ளது. 353 முதல் 368 தொகுதிகள் வரையில் பாஜக கூட்டணி வெற்றி பெறலாம் என Republic செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி, "295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என்றார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது கருத்துக் கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கருத்துக் கணிப்பு. இது அவரது கற்பனைகள் நிறைந்த கருத்துக் கணிப்பு" என்றார்.
எத்தனை இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "சித்து மூஸ் வாலாவின் 295 பாடலை கேட்டிருக்கிறீர்களா? 295" என பதில் அளித்து சென்றார்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என ABP - C Voter கணித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 4 முதல் 6 இடங்களையும் குஜராத்தில் 25 முதல் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 4 முதல் 6 இடங்களையும் கர்நாடாகவில் 23 முதல் 25 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.