Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்
கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் நிர்வாக பணிகள் குறித்து சரமாரியாக எழுப்பியதால் பதில் சொல்ல முடியாமல் திணறிய மேயர் சரவணன் நெஞ்சுவலி என கூறி திடீரென தரையில் படுத்து புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு.ப. தமிழழகன், ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் ஆசை தம்பி, முருகன், அனந்தராமன், சோடா கிருஷ்ண மூர்த்தி, குட்டி தட்சிணாமூர்த்தி, திவ்யபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வம், ம.தி.மு.க. கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்ட பலர் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை குறித்து மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அய்யப்பன் (காங்.,): சுதா எம்.பி. , மக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளார். இந்த தபாலிற்கு மேயர் ஏன் பதில் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மேயர் சரவணன்:- அது சாதாரண கடிதம். தபால் முறையாக எனக்கு பதிவு தபாலில் வரவில்லை. ஆகவே நான் அதற்கு பதில் கூற முடியாது என கூறினார்
இதனால் கோபமடைந்த அய்யப்பன்..சுதா எம்.பி., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேயர் சரவணனும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவா். நாங்கள் 3 பேரும் ஒரே கட்சியில் இருந்தும், மேயர் சரவணன், சுதா எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். எனவே இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறி புறப்பட்டார்.
இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் மாநகராட்சி செயல்திட்ட பொருளின் கோப்புகள் எங்கு உள்ளது. அதில் கையெழுத்திட்டீர்களா? என மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மற்ற உறுப்பினாட்களும் அதே கேள்வியை எழுப்பினர். இதனால் கோபமடைந்த மேயர் சரவணன் கோப்புகள் என்னிடம் தான் இருக்கின்றன. இந்த கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கோப்புகளை நான் கொண்டு வந்து காட்டுகிறேன் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத மற்ற கவுன்சிலர்கள், அனைவரும் விடிய விடிய கூட்ட அரங்கில் அமர்ந்திருக்கிறோம். கோப்புகளை காட்டிவிட்டு தான் இங்கிருந்து செல்ல வேண்டும். கையெழுத்திடாமல் கோப்புகளை வைத்திருப்பதில் என்ன மர்மம் உள்ளது என்று மேயர் சரவணனிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய மேயர் சரவணன் தனது நாற்காலிக்கு பின்புறம் உள்ள ஓய்வு அறையை நோக்கி வேகமாக ஓடினார்.
இதனை கண்ட மாநகராட்சி கவுன்சிலர் குட்டி தட்சிணா மூர்த்தி விரைந்து ஓய்வு அறைக்குள் மேயர் சரவணனை செல்ல விடாமல் கதவை மூடிக்கொண்டு தடுத்தார். மேலும் தரையில் அமர்ந்து கோப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும் ஓய்வு அறை வாசலுக்கு முன்பு திரண்டனர். தொடர்ந்து குட்டி தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே சென்ற மேயர் சரவணன் ஓய்வு அறையின் கதவை தள்ளியப்படி செல்ல முயன்றார். இதனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சுற்றி வளைத்தனர். அப்போது மேயர் சரவணன் திடீரென நெஞ்சு வலி என கூறி கூட்ட அரங்கில் தனது மேயர் உடையுடன் தரையில் விழுந்து காப்பாற்றுங்கள் என்று அலறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை மேயர் சு.ப. தமிழழகன், ஆணையர் லெட்சுமணன், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உதவியுடன் மேயர் சரவணனை ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கேள்வி கேட்டு கவுன்சிலர்கள் சுற்றி வளைத்ததால் அதில் இருந்து தப்பிக்க மேயர் சரவணன் நெஞ்சுவலி என கூறினாரா இல்லை உண்மையிலேயே பதற்றத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதா என அப்பகுதி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.