Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம் நடைபெற்ற 5 மணிநேர விசாரணையில் அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
தவெக தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பரில் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் தவெக தரப்பினர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கரூரில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த சிபிஐ விசாரணைக் குழு, கடந்த டிசம்பர் இறுதியில் தவெக-வின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரை டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரித்தது. அவர்களைத் தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி ஜனவரி 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜரானர். அன்று சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் விஜய் சென்னை திரும்பினார். இந்த நிலையில், விஜய் இன்று மீண்டும் டெல்லி சிபிஐ அலுவகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கினர். குறிப்பாக, ``பரப்புரைக்கு அறிவிக்கப்பட்ட நேரம் என்ன? ஏன் தாமதமாக வந்தீர்கள்? அதிக கூட்டம், தண்ணீர் வசதி இல்லாதது ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? தெரிந்தும் தொடர்ந்து பரப்புரை செய்தீர்களா? கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் பேரணியை ஏன் நிறுத்தவில்லை? கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதும் எதற்காக உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டீர்கள்? கூட்ட நெரிசலை எப்போதுதான் உணர்ந்தீர்கள்? கூட்ட நெரிசலை தடுக்க என்னென்ன முயற்சி செய்தீர்கள்" என்று விசாரணையில் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பெரும்பாலும் சுருக்கமாகப் பதிலளித்தாகவும், சில கேள்விகளுக்கு தமிழக காவல்துறையை கைகாட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, சில கேள்விகளுக்கு தங்கள் தரப்பில் ஆலோசிக்க விஜய் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் இந்த வழக்கில் மிக முக்கியமாக தேர்தலுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி பாதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும், அதில் விஜய்யின் பெயரும் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.




















