EPS vs Vijay: வழிக்கு வந்த சீமான்! முரண்டு பிடிக்கும் விஜய்! விடாமல் போராடும் EPS | Seeman | ADMK
அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து சீமானுக்கும், விஜய்க்கும் தூது அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. சில முக்கியமான விஷயங்களை கணக்கு போட்டு 2 பேரையும் எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என முழு வேகத்தில் வேலை நடந்து வருகிறது. சீமான் வழிக்கு வந்தாலும் விஜய் முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாஜகவுடன் கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளதாக மார்த்தட்டிக்கொள்கிறது அதிமுக. இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முழங்கிய எடப்பாடி பழனிசாமியே அமித் ஷா அருகே கப்சிப் என உட்கார்ந்திருந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
இந்த கூட்டணியை இன்னும் வலுவாக மாற்ற வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியையும், தவெகவையும் உள்ளே இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதால் சில வாக்குகளை இழக்க வாய்ப்புள்ளதால் சீமான் மற்றும் விஜய்யை வைத்து அதனை சரிகட்ட இபிஎஸ் கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.
இதுவரை தேர்தல்களில் தனித்து களம் கண்ட சீமான் இந்த முறை கூட்டணி அமைக்கலாமா என்ற யோசனைக்கு வந்துள்ளதை அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் அவர் இணக்கமாக இருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. சென்னை வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
அதிமுகவின் முக்கிய பொறுப்புகளிலும் சென்னை மேயர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்த சைதை துரைசாமியை சமீபத்தில் சீமான் சந்தித்தாகவும் அவர் சீமானை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுகவும், பாஜகவும் போராடி வருகின்றன. இந்த முறை விஜய்யும் களத்தில் உள்ளதால், மேலும் வாக்குகள் சிதறி, அது திமுகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என்பது தற்போது அதிமுகவின் பயமாக உள்ளது. அதனால் தவெகவை கூட்டணிக்குள் இழுத்து போட்டால் அக்கட்சியின் வாக்குகள், அதிருப்தி வாக்குகள் என கனிசமான வாக்குகளை பெற்று, ஆட்சியை பிடித்துவிடலாம் என்று அதிமுக நினைப்பதாக தெரிகிறது.
ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோர் போன்றோரை வைத்து விஜய்யை வழிக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்கின்றனர். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை யாருக்கும் விட்டுத்தர விஜய் தயாராக இல்லை. அதுவும் இல்லாமல் கொள்கை எதிரியாக பாஜகவை சொல்லிவிட்டு முதல் தேர்தலிலேயே அவர்கள் பக்கம் சாய்ந்தால் மக்களுக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்பதால் கூட்டணிக்கு வராமல் விஜய் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. அப்படியே கூட்டணிக்கு வந்தாலும் 3 இலக்கத்தில் தான் விஜய் சீட் கேட்பார், அதற்கு அதிமுக கண்டிப்பாக ஒத்துக் கொள்ளாது என்பதால் விஜய்யுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.





















