OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
இபிஎஸ்-க்கு ஸ்கெச்ட் போட்டு ஓபிஎஸ், டிடிவி செங்கோட்டையன் ஆகியோர் தேவர் ஜெயந்தி அன்று ஒன்றுகூடி செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் அந்த ப்ளான் கைகொடுக்கவில்லை என்றும், வரும் தேர்தல் அறிக்கையில் முக்குலத்தோர் வாக்குகளை கவர் செய்யும் வகையில் இபிஎஸ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு அடியாக மாறும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகளை இபிஎஸ் இழந்து விடுவார் என்ற விமர்சனமும் இருந்தது. டெல்டா, தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வரவிடாமல் தடுக்க, டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோர் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை தேவர் இன விரோதி என்ற வகையில் சித்தரிக்க முயன்ற நிலையில், பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இபிஎஸ்.
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தனது பிரச்சாரத்தில் அதிரடியாக கோரிக்கை வைத்தார். எடப்பாடியை சுற்றி பின்னப்படும் தேவர் இன விரோதி என்ற சிலந்தி பின்னலை இந்த கோரிக்கையால் அவர் அறுத்தெறிந்ததை பார்த்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிர்ச்சியடைந்ததாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் தேவர் ஜெயந்தி விழாவை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கலாம் என்ற திட்டத்தை தீட்டி அந்த தினத்தில் செங்கோட்டையனை தங்களுடன் கைக்கோர்க்க வைத்தனர். ஆனால், அந்த திட்டமும் பெரிதாக எடுபடவில்லை என சொல்கின்றனர்.
கடந்த 2023ல் இபிஎஸ் பசும்பொன் சென்ற போது அவருக்கு எதிராக சிலர் முழக்கமிட்டனர். இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் அவருக்கான ஆதரவு அதிகரித்திருந்தது. அதற்கு காரணம், அதிமுகவில் முக்குலத்தோர்க்கு அவர் மீண்டும் அங்கீகாரம் கொடுத்ததுதான் என சொல்கின்றனர். குறிப்பாக, கட்சியில் துணைப் பொதுச்செயலாலராக நந்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் என அவர் முக்குலத்தோர் நிர்வாகிகளை பதவியில் உட்கார வைத்துள்ளார். அதோடு, தன்னுடைய பிரச்சார பயணத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்துப்போகாமல், அதனை கோரிக்கை மனுவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைவிடம் கொடுத்தது வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சூழலில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்குலத்தோர் மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, தேவருக்கு பாரத ரத்னா, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர், கள்ளர், மறவர், அகமுடையார் என்று மூன்று சாதியாக இருப்பவர்களை ‘தேவர்’ என்ற ஒரே குடைக்குள் கொண்டுவந்து சாதி சான்று வழங்குவது, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதுபோல, முக்குலத்தோர் சமூகத்தினருக்கும் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிடவிருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன்மூலம், 2026ல் முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக பக்கம் சிந்தாமல், சிதறாமல் பெற முடியும் என எடப்பாடி பழனிசாமி நம்புவதாக கூறப்படுகிறது.





















