12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
ஏப்.8 முதல் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்; எப்போது வரை? முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

2025- 26ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கியத் தேதிகள் இதோ!
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. குறிப்பாக இந்தத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கின. மார்ச் 26ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8,27,475 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். தினசரி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:15 வரை நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8,27,475 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். தினசரி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:15 வரை நடைபெற உள்ளது.
4,540 கண்காணிக்கும் படைகள்
7,545 பள்ளிகள் உள்ள நிலையில், 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் 4,540 கண்காணிக்கும் படைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தேர்வறைகளில் கண்காணிப்பாளர்களாக 44,624 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல ஸ்கிரைபாக (சொல்வதை எழுதுபவர்) 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு 7,465 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
என்னென்ன தேதிகளில் என்ன பணிகள்?
தொடர்ந்து விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் இருந்து மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28ஆம் தேதி அன்று அனுப்பப்பட உள்ளன. தொடர்ந்து மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை விடைத்தாள்கள் கலக்கிப் பிரித்தல் பணி நடைபெற உள்ளது.
மேலும் அங்கிருந்து ஏப்ரல் 4ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு விடைத் தாள்கள் அனுப்பப்படும். தொடர்ந்து முதன்மைத் தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்களின் விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்குகிறது.
11ஆம் வகுப்பு விடைத் தாள்களும் திருத்தம்
உதவி தேர்வாளர்களின் விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாதோர் விடைத் தாள்களும் இந்த கால அவகாசத்தில் திருத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.























