DMK PMK clash at Dharmapuri | திமுக- பாமக மோதல்! கைகலப்பான நிகழ்ச்சி! திணறிய POLICE
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் தூண், நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை பணியின் போது, திமுக பாமக விடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் இரண்டு நுழைவாயில்களிலும், நுழைவாயில் தூண்கள் மற்றும் பயணிகள் நிற்பதற்கான நிழற்குடை அமைப்பதற்கு, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 39.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை போடுவதற்காக இன்று திமுகவினர் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வண்ண பலூன்களை கட்டி இருந்தனர். மேலும் பூமி பூஜை செய்வதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி வருவதாக தகவல் வெளியானது.
பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய பணிகளுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்யலாமா என எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் திமுகவினருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இறுதியில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படாமல் நிறுத்தப்பட்டது.
இருந்தாலும் அடிக்கல் நாட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி பாமகவினர் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நிலையத்தில் புதிய பணிகள் தொடங்குவதற்கான பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என காவல் துறை தரப்பில் தெரிவித்தவுடன் பாமகவினர் கலைந்து சென்றனர்.