America Vs Venezuela
வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு 3 முக்கிய உண்மை காரணங்கள் உள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்க ஒரு முதலாளித்துவ நாடாகவே கருதப்படுகிறது. ஆனால், வெனிசுலா ஒரு கம்யூனிச நாடாகும். ட்ரம்ப் வெனிசுலா நாட்டின் அதிபரை சிறைபிடிப்பதற்கு முக்கியமான காரணமாக, அமெரிக்காவிற்குள் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலாவே காரணம் என்றும், அதை அதிபர் மதுரோ கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் மிகவும் முக்கியமானது வெனிசுலா. உலகத்தில் உள்ள எண்ணெய் வளங்களில் 5ல் ஒரு பங்கு எண்ணெய் வெனிசுலாவில் உள்ளது. அதாவது, சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வெனிசுலாவில் உள்ளதாக தரவுகள் கூறப்படுகிறது.உலகிலே எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடுகள் மீது எப்போதும் அமெரிக்காவிற்கு ஒரு கண் இருந்து வருகிறது. அதற்கு ஈராக் மீது கடந்த காலத்தில் அமெரிக்கா நடத்திய போர் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். தற்போது வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததன் மூலமாக தனக்கு ஆதரவான ஒருவரை அதிபராக வெனிசுலாவில் நியமித்து, அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
வெனிசுலா நாடானது கம்யூனிச கொள்கை கொண்ட நாடாக உள்ளது. அமெரிக்காவிற்கு தண்ணி காட்டிய நாடாக எப்போதும் திகழ்வது கியூபா. கியூபாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் அறியப்படுபவர் பிடல் காஸ்ட்ரோவும், வெனிசுலாவின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவோசும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். பிடல் காஸ்ட்ரோவை தனது வழிகாட்டி என்றே புகழ்ந்தார். தென் அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட ஒரு நாடு இருப்பதையும் அமெரிக்க விரும்பவில்லை. இதுவும் வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததற்கு முக்கிய காரணம் ஆகும். இதன் காரணமாகவே ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கம்யூனிச நாடான வெனிசுலாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள எண்ணெய் வளங்கள் மீது அதிகளவு சீன முதலீடுகள் இருந்து வருகிறது. அது அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மதுரோவை சிறைபிடித்ததன் மூலமாக அமெரிக்கா தனது முதலீடுகளை வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது செலுத்த திட்டமிடும் என்று கருதப்படுகிறது.
வெனிசுலா நாட்டில் பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் அந்த நாட்டு மக்கள் பலரும் அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். வெனிசுலா மக்கள் பலரும் நிகரகுவா, கடேமலா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். இது அமெரிக்காவிற்கு மிகவும் தலைவலியை உண்டாக்கி வருகிறது. சுமார் 7 லட்சம் பேர் அமெரிக்காவில் அகதிகளாக இருப்பதாக தரவுகள் கூறுகிறது. மேலே கூறிய இந்த காரணங்களுக்காகவே அதிபர் ட்ரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.





















