Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்"தல இருக்குறப்போ வால் ஆடலாமா"பதிலடி கொடுக்கும் திமுக
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிகாரத்தில் பங்கு கேட்ட நிலையில் தலைவர்கள் சரியான வழியில் பயணிக்கும் போது வால்கள் ஆடலாமா என அட்டாக் செய்துள்ளார் திமுக சரவணன்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குரல் அதிகம் எழுந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் என சொல்லி புயலை கிளப்பினார். அதேபோல் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் அதே கருத்தை சொல்லியுள்ளது திமுகவினரின் விமர்சனத்தில் சிக்கியுள்ளது. சர்வே ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த சர்வேயின்படி திமுகவுக்கு 17.07 வாக்கு சதவீதமும், காங்கிரஸுக்கு 3.10 வாக்கு சதவீதமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதில் ‘யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! தொகுதியை மட்டுமல்லாமல் அதிகாரத்தையும் பகிர்வதற்கான நேரம்” என கூறியுள்ளார்.
இதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவில், ‘இது காங்கிரஸ் இயக்கத்தின் குரல் போலத் தெரியவில்லையே. தலைவர்கள் சரியான வழியில் பயணிக்கும் போது வால்கள் ஆடலாமா? திமுகவினரும் இப்படி கருத்து கண்ணாயிரமாக மாறி கருத்துகளை சொன்னால், யாருக்கு கொண்டாட்டம்? பாஜக/ஆர்எஸ்எஸ் கூட்டத்தினருக்குத் தானே? அவர்கள் அதைத்தானே விரும்புகிறார்கள். ராகுல் காந்தி அவர்களை திமுகவினரை போல கொண்டாடுபர்கள் வேறு யார்? தேர்தல் காலத்தில், இது போல ருபாய்க்கு பத்து சர்வேக்கள் ஆயிரம் வரும், கள நிலவரம் என்ன என்பதனை அனைவரும் அறிவர்” என விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா தனது பதிவில், ‘சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன், தகைசால் தமிழர் அய்யா பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர். அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது” மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?” என தெரிவித்துள்ளார்.





















