எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் - OPS அதிரடி | ADMK | MK Stalin | Kodanad case | OPS | TN Assembly
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: எங்களை அச்சுறுத்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக ஈடுபடுகிறது. எப்படியாவது பொய் வழக்கு போட்டு எங்களை நசுக்க வேண்டும் என்று செயல்படுகிறார் ஸ்டாலின். நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி நாடுவோம். அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும். இன்றும், நாளையும் சட்டமன்ற கூட்டத் தொடரை அதிமுக புறக்கணிக்கும். அராஜக திமுக அரசு எடுத்திருக்கும் வன்முறையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு இருக்கும்.