REAL LIFE நண்பன் விஜய்! வீடியோ காலில் பிரசவம்! இளைஞர் செய்த வீர சம்பவம் வைரல் வீடியோ
மும்பையில் ஓடும் ரயிலில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் யாரும் அருகில் இல்லாததால், வீடியோ காலில் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, இந்த வீர செயலை செய்து இரு உயிர்களை காத்துள்ளார் இளைஞர் விகாஸ். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் மெய்சிலிர்த்து இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே ரயிலில் பயணித்த மஞ்சீத் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, கடந்த 14 அக்டோபர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் ராம் மந்திர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அது. இளைஞர் ஒருவர் ரயில் செயினை இழுத்து ரயிலை அவசரமாக நிறுத்தினார். நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன் குழந்தை பாதி வெளியில் வந்த நிலையில் இருந்தார். அந்த நொடியில் கடவுள் தான் அந்த இளைஞரை அனுப்பினார் என்பது போல இருந்தது.
அப்போது அந்த இளைஞரின் குரல் கணீர் என ஒலித்தது. நான் என் வாழ்வில் முதன்முதலாக இதுபோன்ற ஒரு செயலை செய்துள்ளேன். நான் மிகவும் பயந்தேன். மேடம் தான் விடியோ காலில் எனக்கு அறிவுரைகள் வழங்கினார் என பெண் டாக்டர் ஒருவரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் எத்தனையோ மருத்துவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பிறகு விகாஸ் என்ற அந்த இளைஞர் தான் மருத்துவர் ஒருவர் வீடியோ காலில் குழந்த பிரசவிப்பதற்கான அறிவுரைகளை கூற அதனை அப்படியே செய்து தாயையும் சேயையும் காப்பாற்றினார். அவரது தைரியத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. தற்போது குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர்கள் இருவரும் நலமுடன் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து இரு உயிர்களை காப்பாற்றிய அந்த விர இளைஞருக்கு இணையத்தில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.





















