Madurai Bus Driver | "கட்டி வச்சு அடிப்பேன்"ஓட்டுநர்களுக்கு warning வீடியோ.. தலைமறைவான உரிமையாளர்
மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை பேருந்து உரிமையாளர் ஜன்னலில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவு ஆனவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதியிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிய ஓட்டுனர் அவர்களிடம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு அதை உரிமையாளரிடம் கொடுக்காமல் பேருந்து ஓட்டுநரே வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அந்த பேருந்தின் உரிமையாளர் ஓட்டுநரை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கையை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அப்போது உண்மையை சொல்லு.. இனி உன்னை மதுரைக்குள்ளேயே பார்க்கக்கூடாது என ஓட்டுநரை மிரட்டும் வீடியோ வெளியானது.
இந்த வீடியோவை அலுவலகத்தில் உள்ள நபர்களே பதிவு செய்து அதனை அனைத்து ஆம்னி பேருந்துகள் ஓட்டுனர்கள் கிளீனர் உள்ள whatsapp குரூப்பில் பதிவிட்டு அதில் இந்த ஓட்டுனரை யாரும் பணிக்கு சேர்க்கக்கூடாது எனவும், யாரும் இது போல் செய்தால் இது தான் தண்டனை எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஓட்டுனர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது ரூம்மில் அடைத்து வைத்து ,துன்புறுத்தி, மிரட்டல், விட்டதாக மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், வீடியோ வெளியான நிலையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தலைமறைவானர்.
தொடர்ந்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் அந்நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர். முத்துக்குமார், முருகேசன், செல்வம், சக்தி, சோலை ராஜ் ஆகியோரை முதற்கட்டமாக கைது செய்துள்ளனர். தலைமறைவான ட்ராவலர்ஸ் உரிமையாளர் ராஜா சேகர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.