சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
நிலக்கல்லில் இறங்கி கேரளா அரசு பேருந்தில் பம்பை வரவேண்டும். தரிசனம் முடிந்து பம்பை திரும்பியதும் செயின் சர்வீஸ் பேருந்து மூலம் நிலக்கல் வந்து ஊருக்கு திரும்ப வேண்டும்.
கேரளா என்றாலே தமிழ்நாட்டில் பலருக்கு நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோயில் தான். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும்போது, தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. 41 நாட்கள் அதாவது 1 மண்டலம் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலைக்கு இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் குழுவாக இணைந்து, பேருந்து அல்லது வேன் மூலம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோன்று சமீப காலமாக தனியாக பேருந்து மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ சபரிமலை செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் விரிவான வசதிகளை செய்துள்ளது. பம்பை பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவில் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் கோவை, தென்காசி, பழனி, குமுளி போன்ற பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் நிலக்கல்லில் இறங்கி கேரளா அரசு பேருந்தில் பம்பை வரவேண்டும். தரிசனம் முடிந்து பம்பை திரும்பியதும் செயின் சர்வீஸ் பேருந்து மூலம் நிலக்கல் வந்து ஊருக்கு திரும்ப வேண்டும்.
இதற்காக நிலக்கல் - பம்பை இடையே 180 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 275 முதல் 300 பேருந்துகள் பம்பை வருகிறது. இவற்றில் பெரும் பகுதி மத்திய கேரளா மற்றும் தெற்கு கேரளாவில் இருந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாக தெரிவித்தனர். நடப்பு சீசனில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் தினசரி வருமானம் சராசரியாக 50 லட்சம் ரூபாயாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் பேருந்துகள் இயக்குவதற்காக 290 டிரைவர்கள், 250 கண்டக்டர்கள் பல்வேறு டிப்போக்களில் இருந்து இங்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.





















