கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
MK STALIN MADURAI: மதுரையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

புதிய திட்டங்களை தொடங்கிய முதலமைச்சர்
மதுரை மாவட்டத்தில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3065 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மதுரையில் தமிழக அரசு சார்பாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டவர், புதிய திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
- இன்று திறக்கப்பட்டிருக்கின்ற வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்!
- கோரிப்பாளையம் ஜங்ஷனில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில், 70 பள்ளிகளை மேம்படுத்தி இருக்கிறோம்.
- முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 428 பணிகள் நடைபெற்றிருக்கிறது.
- ஆதிதிராவிடர் நல வீட்டுவசதி திட்டத்தில், 57 பணிகள் நடைபெற்றிருக்கிறது.
- காந்தி அருங்காட்சியகத்தில், விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி நடைபெற்றது.
- அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் பி.கே.மூக்கையா தேவர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டி திறந்து வைத்திருக்கிறோம்.
மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த நான்கரை ஆண்டு காலங்களில், மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்தாக மதுரையில் செயல்படுத்தப்படவுள்ள 6 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மதுரைக்கு புதிய 6 அறிவிப்புகள்
முதலாவது அறிவிப்பு
மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கின்ற நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது
இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில், 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நான்காவது அறிவிப்பு
மேலூர் வட்டத்தில் இருக்கின்ற, கேசம்பட்டி கிராமம் - பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில், சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று அவைகள் மேம்படுத்தப்படும். இந்த அறிவிப்புகளை எல்லாம் நான் வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.





















