Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளர் தவெக கொடியை காண்பித்ததால் கோபமான விழா கமிட்டியினர் பரிசே கிடையாது என சொல்லி வெறும் கையோடு அனுப்பி வைத்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்தார். அப்போது ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளைப் அடக்கும் வீரருக்கு கால்நடைப் பராமரிப்புத்துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயன்பன் என்ற பெயரில் காளை ஒன்று களத்துக்கு வந்தது. அப்போது அதன் உரிமையாளர் தவெக கொடியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியின் போது கட்சி கொடிகளை காண்பிக்க கூடாது என்ற விதி இருக்கிறது.
விதியை மீறி தவெக கொடியை காட்டிய இளைஞரை விழா கமிட்டியினர் கண்டித்தனர். ஆனால் அதனையும் மீறி அவர் தொடர்ந்து கொடியை காட்டி வாக்குவாதம் செய்தார். காளையும் யாரிடம் பிடிபடாமல் சென்றது. இருந்தாலும் உரிமையாளர் விதிமுறைகளை மீறியதால் பரிசு எதுவும் கிடையாது என சொல்லி விழா கமிட்டியினர் அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் தவெகவினர் கட்சிக் கொடியை காட்டியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.





















