DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
திமுக-விடம் காங்கிரஸ் அதிக தொகுதிகளை ஒதுக்க கோருவது ஏன்? என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பரப்புரை, கூட்டணி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
நெருங்கும் தேர்தல்:
தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை வைத்துள்ள கட்சியாக இருப்பது திமுக. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக போன்ற பல கட்சிகளை தங்கள் வசம் கூட்டணியில் வைத்துள்ள திமுக-விற்கு தொகுதி பங்கீடு என்பது சவாலானதாக மாறியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு என்று அடுத்தடுத்து அழுத்தங்களை தந்து வருகிறது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த அடிப்படையில் கூடுதல் இடங்கள் கேட்கப்படுகிறது? என்று தனியார் வார இதழ் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமாரிடம் கேட்கப்பட்டது.
அதிக தொகுதி கேட்பது ஏன்?
அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, 2021 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், திமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்கியபோது சம்மதித்தோம். ஆனால், நாங்கள் வாக்குச்சாவடி அளவிலும், கிராம அளவிலும் இன்று பலம் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையிலே அதிக தொகுதிகளை கேட்கிறோம். எந்த தவறும் இதில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிளை திமுக ஒதுக்கியது. அதில் அவர்கள் 18 இடங்களில் வெற்றி பெற்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரசை தங்கள் பக்கம் கூட்டணிக்கு அழைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்யின் செல்வாக்குடன் தவெக பக்கம் சென்றால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திமுக-விற்கு அழுத்தம்:
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுக-விற்கு அழுத்தம் தரும் வகையில் தனது எக்ஸ் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். ராகுல்காந்தியும் விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இதுவும் திமுக தலைமையில் காங்கிரஸ் செயல்பாடுகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திமுக-விடம் தொடர்ந்து காங்கிரஸ் அதிக தொகுதிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. மேலும், ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கையை வலுவாக வைத்து வருகின்றனர். காங்கிரஸ் மட்டுமின்றி விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிக தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக-விற்கு அழுத்தம் தருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி தாவல், கட்சி தாவல் போன்ற பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















