ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் போல பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை நான் சந்தித்தது இல்லை என்று நடிகையும், எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இவர் பாஜக-வில் இணைந்து தற்போது எம்பி-யாக உள்ளார். இவர் ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்தார்.
இதுதொடர்பாக, கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பு கொண்டவர்:
நான் ஒரு காவி நிற ( பாஜக) கட்சிக்கு ஆதரவளிப்பதால், திரையுலகில் நான் மிகுந்த பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும், உங்களை ( ஏ.ஆர்.ரஹ்மான்) விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும்.
சந்திக்க மறுப்பு:
எனது 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன், கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு பரப்புரை படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால், 'எமர்ஜென்சி' திரைப்படம் அனைவராலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் கூட அதன் சமநிலை மற்றும் இரக்கமான அணுகுமுறைக்காகப் படத்தைப் பாராட்டினார். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் பார்வையற்றவர் ஆகிவிட்டீர்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் போராட்டங்கள் உள்ளன. படங்களை விடுங்கள், எனது சிறந்த நண்பர்கள் என்று கூறிக்கொண்டு, இலவச விளம்பரப் பிரச்சாரங்களில் தங்கள் நகைகளையும் ஆடைகளையும் அறிமுகப்படுத்தும்படி என்னிடம் கெஞ்சிய பெரிய வடிவமைப்பாளர்கள், பின்னர் எனது ஒப்பனையாளருக்கு ஆடைகளை அனுப்ப மறுத்துவிட்டனர்.
அவமானம்:
அவர்கள் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள் அல்லது என்னைப் பற்றி பதிவிடுவதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நான் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்னவென்றால், நான் ராம ஜென்மபூமிக்கு மசாபா குப்தாவின் சேலையை அணிந்து சென்றபோது, நான் அவரது சேலையில் ராம ஜென்மபூமிக்குச் செல்லக்கூடாது என்று அவர் ஒப்பனையாளரிடம் கூறினார்.
நான் ஏற்கனவே லக்னோவிலிருந்து அயோத்திக்குக் கிளம்பிவிட்டேன், அதனால் ஆடையை மாற்றுவது சாத்தியமில்லை. நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் இழிவுபடுத்தப்பட்டதாகவும் உணர்ந்தேன், என் காரில் அமைதியாக அழுதேன். பின்னர், மற்ற வடிவமைப்பாளர்களைப் போலவே, அவரும் தனது பெயரையோ அல்லது தனது பிராண்டின் பெயரையோ குறிப்பிட வேண்டாம் என்று ஒப்பனையாளரிடம் கூறினார். இன்று ஏ.ஆர். ரஹ்மான் முதலைக் கண்ணீர் வடிக்கிறார், அவர்களின் சொந்த வெறுப்பு மற்றும் பாரபட்சங்களைப் பற்றி என்ன சொல்வது?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரணாவத் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மத ரீதியான காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு பாலிவுட்டில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். அதன் எதிரொலியாகவே கங்கனா ரணாவத் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.





















