IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர். இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
ரோகித் - விராட்:
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இரு அணிகளும் களமிறங்குகின்றனர்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனாலும், தொடக்க வீரர்கள் கேப்டன் கில் - ரோகித் சர்மா நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக, ஓய்வு நெருக்கடியை எதிர்கொண்டு வரும் ரோகித் சர்மா இந்த போட்டியில் அசத்தலாக ஆட வேண்டிய அவசியத்தில் உள்ளார். சுப்மன்கில் பெரிய இன்னிங்சை ஆடி நீண்ட நாட்களாகிவிட்டதால் அவரும் சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது.
பேட்டிங் பலம்:
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி முதல் போட்டியில் 93 ரன்கள் விளாசினார். இரண்டாவது போட்டியில் அவர் 23 ரன்களில் அவுட்டானாலும் வரும் போட்டியில் அவர் தனது வழக்கமான இன்னிங்சை ஆடுவார் என்று கருதப்படுகிறது. இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் கே.எல்.ராகுல். மிடில் ஆர்டரை மொத்தமாக தாங்குபவராக இருக்கும் அவர் அடுத்த போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். மிடில் ஆர்டரில் ஆடும் ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் கான்வே - நிகோல்ஸ் ஜோடி தொடக்கத்திலே நல்ல ரன்களை குவிக்க முயற்சிக்கும். அந்த அணிக்கு பலமாக மிட்செல் உள்ளார். அவர் கடந்த 2 போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்களான யங், பிலிப்ஸ், கேப்டன் ப்ரெஸ்வெல், ஹே ஆகியோரும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
வெல்லப்போவது யார்?
இந்த தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதில் பந்துவீச்சாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்திய அணிக்கு சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா வேகத்தில் பக்கபலமாக உள்ளனர். இவர்கள் நியூசிலாந்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சுழலில் ஜடேஜா, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். நியூசிலாந்து அணியில் ஜேமிசன் மிகவும் பலமாக உள்ளார். கிளார்க், ஃபாக்ஸ், லெனோக்ஸ், ப்ரெஸ்வேல் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இதற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகே, ஜுலை மாதம் ஒருநாள் தொடரில் ஆடுவார்கள் என்பதால் அவர்கள் இருவரும் சிறப்பாக ஆடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.




















