ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை, ஜனவரி 30ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ECI TN Voter List: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை, நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
கால அவகாசம் நீட்டிப்பு:
முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இன்றளவும் பலர் தங்களது விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்குவதற்கான ஆவணங்களில் சிக்கலை எதிர்கொள்வதால், மேலும் 12 நாட்கள் அதாவது ஜனவரி 30ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் சுமார் 98 லட்சம் பேர், தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெயர் சேர்க்க வாக்காளர்கள் தீவிரம்:
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது இரட்டை வாக்குரிமை, குடியிருந்த பகுதியில் இருந்து வேறு முகவரிகளுக்கு மாறியவர்கள், திருமணமாகி வேறு பகுதிக்கு சென்றவர்கள் என பல்வேறு தரப்பினரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்கள் உரிய ஆவணங்களை செலுத்தி தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே தகுதியான நபர்களின் வாக்குரிமை பறிபோவதை தடுக்கும் விதமாக, தேர்தல் ஆணையம் இந்த கூடுதல் அவகாசத்தை வழங்கியுள்ளது.
தாமதமாகும் வாக்காளர் பட்டியல் பணிகள்:
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்குரிமையை நீக்கும் விதமாக நவம்பர் 4ம் தேதி தமிழ்நாட்டில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது. ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், அந்த நடைமுறை டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதைதொடர்ந்து டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விடுபட்டவர்கள் ஜனவரி 18ம் தேதி வரை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அவகாசமும் தற்போது ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்தபடி பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகுமா? அல்லது தாமதமாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏப்ரல் கடைசியில் சட்டமன்ற தேர்தல்?
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த முறையும் அதேகாலகட்டத்தில் தான் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதில் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















