Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
’’அந்த நாள் நிச்சயம் வரும்..ஹிஜாப் அணிந்த ஓர் இஸ்லாமிய பெண் இந்திய நாட்டின் பிரதமாராவார்’’ என ஹைதராபாத் எம்ப் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளது தற்போது விமர்சன வலையில் சிக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது பேசிய ஓவைசி, "பாகிஸ்தானை போல் இந்தியா இல்லை..அந்த நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே நாட்டின் பிரதமர் அல்லது தலைவராக முடியும் ஆனால், இந்தியாவில் அப்படி கிடையாது. டாக்டர் அம்பேத்கர் வகுத்த நமது அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவொரு குடிமகனும் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு பிரதமர், முதல்வர் அல்லது மேயர் கூட ஆகலாம் என கூறுகிறது. அந்த நாள் நிச்சயம் வரும். அப்போது நானும் நீங்களும் இல்லாமல் கூட போகலாம், ஓர் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் இந்த நாட்டின் பிரதமராவார், முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் பரப்பு வெறுப்பு நீடிக்காது என பாஜகவினரை சாடினார் ஓவைசி.
இந்நிலையில் ஓவைசியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர், ஷெசாத் பூனாவாலா, "ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார் என்று கூறுகிறார் ஓவைசி. அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடுக்கவில்லை, ஆனால் நீங்கள் முதலில் ஒரு பஸ்மண்டா முஸ்லிமையோ அல்லது ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணையோ உங்கள் கட்சியின் தலைவராக்குங்கள்" என்று ஓவைசிக்கு சவால் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பாஜக எம்.பி. அனில் போண்டே, இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அடிமைத்தனம், அதை யாரும் விரும்பாததால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் எனக் கூறியுள்ளார் மேலும் ஈரானில் பெண்கள் இந்த நடைமுறைக்கு எதிராகப் போராடி வருவதை சுட்டிக்காட்டியதோடு இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஓவைசி தரப்பினருக்கும் பாஜகவினருக்கும் இடையே இணையத்தில் வார்த்தைப்போர் முற்றி வருகிறது





















