TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
TTV in AIADMK alliance: தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை கோர்க்கவுள்ளனர்.

திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணியோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் காங்கிரஸ் கட்சி திடீரென போர்கொடி தூக்கிய நிலையில், தேசிய தலைமையின் உத்தரவின் காரணமாக கப் சிப் ஆகியுள்ளது காங்கிரஸ்.
டிடிவி தினகரன் அரசியல் மாற்றம்
இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. இதற்கு ஏற்ப பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக பாமகவையும் தங்கள் அணியில் இணைத்துள்ளார். அடுத்தாக தேமுதிக மற்றும் அமமுகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் நீடித்த டிடிவி தினகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என அறிவித்தார். துரோகி எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவேன் எனவும் கூறியிருந்தார்.
ஒரே மேடையில் இபிஎஸ்- டிடிவி தினகரன்
இதற்கு ஏற்ப கடந்த சில வாரங்களாக டிடிவி தினகரன் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வெளியானது. விஜய்க்கு ஆதரவாகவும் பல கருத்துகளை டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்த டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டார். இதனை ஆரம்பத்தில் மறுத்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அதிமுக- பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவது உறுதியாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.
முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்- ஓகே சொன்ன டிடிவி
இதனையடுத்து 23ஆம் தேதி கூட்டத்திற்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் தங்களது தொண்டர்களை அழைத்து வர டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என உறுதியாக இருந்த டிடிவி தினகரன் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு அம்மா ஆட்சி அமைய துணையாக இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





















