Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுதான் தன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

தனியார் யூ டியூப் தொலைக்காட்சியில் நடத்திய மாணவர்களுடனான சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, அவரிடம் மாணவர் ஒருவர் நீங்கள் ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசுடன் சமரசம் செய்ய வேண்டி வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
சேட்டைக்காரன்:
அப்போது, அவர் பதிலளித்து பேசியதாவது,
இந்திய நிலப்பரப்பின் எல்லா மாநிலங்களிலும் இந்தி ஏற்கப்பட்டுள்ளது. நாம்தான் எதிர்த்து போராடியுள்ளோம். அவர்கள் ஜிஎஸ்டியை ஏற்றார்கள். நாம் எதிர்த்தோம். சிஐஏ-வை ஏற்றார்கள். நாம் எதிர்த்தோம். நீட் அனைவரும் எழுதினார்கள். நாம் எதிர்த்தோம்.
இங்கே ஒரு தூய மரபணு உள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. அது எப்போதுமே அநீதியை எதிர்த்துக் கொண்டே இருக்கும். அண்ணன்கிட்ட கொடுத்துவிட்டால் நீதான் என்னிடம் கெஞ்ச வேண்டும். ஏனென்றால் அவ்வளவு சேட்டைக்காரன் நான்.
ஜிஎஸ்டி தர முடியாது:
ஜிஎஸ்டி 28 விழுக்காடு எடுத்துக் கொள்கிறார்கள். மொத்த வரியையும் எடுத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் எங்கள் முதலமைச்சரை கெஞ்ச விடுகிறாய். வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தரமாட்டேங்குகிறார்கள். நான் என்ன பண்ணுவேனு நினைக்குற?
தர முடியாது. என்ன பண்ணுவேனு கேட்பேன். நீ என்ன வெள்ளைக்காரன் காலத்தில்தான் வரி போடாத இயக்கமா? கொள்ளைக்காரன் காலத்திலும் வரி போடாத இயக்கம் என்று போடுவேன்.
கந்துவட்டியா?
நீ என்னை மீறி ஜிஎஸ்டி கட்டினால் மின்சாரத்தை துண்டித்து உன் கடைக்கு உரிமத்தை ரத்து செய்துவிடுவேன். நீ என்னைக் கேட்காமல் அங்கே ஏன் கொடுக்கிறாய்? நான் என்ன முறை கொண்டு வருகிறோம் என்றால், மத்திய அரசுக்கு என்று நிதி எது? மாநில அரசின் நிதிதானே மத்திய அரசின் நிதி.
மொத்த நிதியும் வாங்கி வைத்துக்கொண்டு நான் கேட்கும்போது தரமாட்டேன் என்று சொல்கிறாய். நீ என்ன வட்டிக்கடை வைத்துள்ளாயா? அரசாங்கமா? கந்துவட்டிக்கடையா? அனைத்தையும் தனியார்மயப்படுத்துவிட்டாய். போக்குவரத்து, தொடர் வண்டி, மருத்துவம், கல்வி. ராணுவத்திலும் 100 சதவீதம் அந்நிய முதலீடுகளை கொண்டு வந்துவிட்டாய்.
தனியார்மயம்:
ராணுவத்தில் சீருடையை தைத்து கொடுப்பவர் யார்? உணவு வழங்கும் கேன்டீனை நடத்துவது யார்? சொல்லுங்கள் யார் நடத்துவது? அனைத்துமே தனியாருக்கு கொடுத்துவிட்டாய். ரஃபேல் போர் விமானம் எங்கே வாங்கினாய்? பிரான்சில் வாங்கினாய். எந்த நாட்டுடன் சண்டை போட்டு என்னை காப்பாற்றப் போகிறாய்?
அனைத்து நாடுகளிடமும் நீ ஆயுதம் வாங்கி குவித்து வைத்துவிட்டு, இதில் எந்த நாட்டுடன் சண்டையிட்டு என்னைக் காப்பாற்றுவாய்? உலகத்தரம் வாய்ந்த ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிற்கு தயாரித்து தர வேண்டும் என்று ஃப்ரான்ஸிற்கு ஏதும் நேர்த்திக்கடன் உள்ளதா?
நீட் தேர்வை நடத்துபவன் யார்? அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ப்ரோமெட்ரிக் நிறுவனம். உன் நாட்டில் சிறந்த மருத்துவ மாணவனைத் தேர்வு செய்ய இந்த தனியார் முதலாளிக்கு ஏதும் நேர்த்திக்கடன் உள்ளதா?
75 - 25:
உன் நாட்டில் ஒரு மருத்துவ மாணவனை தேர்வு செய்ய தகுதியற்ற நீ, நாட்டில் தலைவனை எப்படி சரியாக தேர்வு செய்வாய்? என்று நான் எப்படி நம்புவது? சிக்கல் புரிகிறதா? 75 விழுக்காடு அந்தந்த மாநிலங்களுக்கு நிதி. 25 விழுக்காடு உனக்குத் தருவேன். வெளியுறவுத்துறை, பணம் அச்சிடுதல், பாதுகாப்பிற்கு வைத்துக்கொள்ளுங்கள். மீதியை அந்தந்த மாநிலங்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
நிர்வாகத்தையும், அதிகாரத்தையும் பரவலாக்குங்கள். மொத்தத்தையும் குவித்து மேலே ஏறி உட்கார வேண்டாம். மாநில அரசு போடும் சட்டத்தை மத்திய அரசு கேட்காதபோது, மத்திய அரசு போடும் சட்டத்தை ஏன் கேட்க வேண்டும்? என்று நான் போட்டால் நீங்கள்தான் ரெய்டு போட்டு எனக்கு தேநீ்ர வாங்கித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.





















