(Source: Poll of Polls)
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?
46 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் கமலும் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதான் ரஜினிக்கு கடைசி படமா என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, மூன்று முடிச்சு, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தது. 1979ம் ஆண்டு வெளிவந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் தான் 2 பேரும் ஒன்றுசேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசி படம். இந்த காம்போவை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
46 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், இருவருக்கும் இடையிலான 50 ஆண்டுகால நட்பையும், சகோதரத்துவத்தையும் கொண்டாடும் வகையில் இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2027 பொங்களுக்கு தலைவர் 173 படம் திரைக்கு வரவிருக்கிறது.
அன்புடை ரஜினி, காற்றாய் அலைந்த நம்மை இறக்கி இறுக்கிதனதாக்கியது சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழித்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம் மகிழ்வோம். வாழ்க நாம் பிறந்த கலை மண்” என ரஜினிகாந்துக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த படத்தில் கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடித்தால் இருவரையும் ஒன்றாக திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என சோசியல் மீடியாவில் பேசி வருகின்றனர். கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படம் தான் அவருடைய கடைசி படமாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















