Kaithi Movie கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய கைதி.. விளக்கம் அளித்த தயாரிப்பாளர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படத்தின் கதை கேரளாவைச் சேர்ந்த ஒருவருடையது என எழுந்துள்ள சர்ச்சையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதில், ’அனைவருக்கும் வணக்கம்! எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரு. கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! தயாரிப்பாளர், டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் “கைதி”. இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி அதனை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தை தயாரித்திருந்தார் எஸ்.ஆர்.பிரபு. முன்னதாக, முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படமாக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முதல் பாகத்தில் வெளியான கதை என்னுடையது என கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அம்மாநில நீதிமன்றம் இரண்டாம் பாகம் எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ் சஞ்ஜன். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்தபோது தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கதையாக எழுதியதாகவும் , அதனை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடன் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கதை பிடித்துப்போன எஸ்.ஆர்.பிரபு தனக்கு முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் ராஜிவ் சஞ்சன் என்பவர் தெரிவித்துள்ளார். படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இது குறித்து வழக்கு தொடர காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜிவ், நான் இவ்வளவு நாளாக கைதி படத்தை பார்க்கவில்லை. கொரோனா ஊரடங்கு சமயத்தில்தான் பார்க்க நேர்ந்தது, தான் கொடுத்த கதையில் ஒரு பகுதியை மட்டுமே தற்போது படமாக்கியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனது கதையை திருடி படமாக்கியிருப்பதால் எனக்கு நஷ்ட ஈடாக நான்கு கோடியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த கேரள மாநிலம் கொல்லம் உயர் நீதிமன்றம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடைவிதித்தது . மேலும் பிற மொழிகளில் படத்தை ரீமேக் செய்யவும் நீதிபதிகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் ட்ரால் செய்ய துவங்கிவிட்டனர். இயக்குநர் அட்லி மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட இயக்குநர்கள் கதை திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் , தற்போது லோகேஷ் கனகராஜும் இணைந்துவிட்டாரா என ரசிகர்கள் விளாச தொடங்கிவிட்டனர். இந்த குறித்த செய்திகள் வெளியானதை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார் அதில் “ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குநரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா!” என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டுவருகிறது