கடலாடி கால் நனைக்க பூம்புகார் செல்லலாம் வாங்க....!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலம் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருளாதார தேவைகளுக்காக நாம் ஒவ்வொருவரும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு அவ்வப்போது ஒரு 'பிரேக்' தேவைப்படுகிறது. நமது அன்றாட இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து எப்பொழுதுடா விடுபடுவோம்' என்ற சலிப்பு ஏற்படும். ஆனால் பொருளீட்டலையே நமது தலையாய கடமையாக இருக்கும் சூழல் நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதே எதார்த்தம். இந்த சலிப்பை போக்க என்னதான் குடும்பத்துடன் வாழ விடுமுறை நாட்களில் விதவிதமான உணவகம், சினிமா, பார்க் என்று போனாலும் 'என்னாது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு செலவு ஆச்சா' என்பது மட்டுமே மிச்சம். எந்த புது வித அனுபவமும் இல்லாமல் பர்ஸ் காலி ஆகியது என்ற வருத்தம் தான் பெரும்பாலான நேரங்களில் மிஞ்சுகிறது.
இந்த சலிப்பை போக்க சுற்றுலா ஒன்றே தீர்வு. ஒரு சிறு பயணம் நமது வாழ்க்கையில் பெரிய புத்துணர்ச்சியை அளிக்கிறது என்று அடிக்கடி சுற்றுலா செல்பவர்களிடம் உணர முடியும். ஆனால் அதற்கும் பட்ஜெட் வேண்டுமே என்பது உண்மைதான். ஆனால், சுற்றுலாவில் கிடைக்கும் அனுபவமும், புத்துணர்ச்சியும் நம்மை முன்பை விட அதிகமாக இயங்க வைக்கும் என்பது உண்மையே. இயற்கையின் படைப்பில் எங்கெங்கு காணினும் வியந்து பார்க்கும் அழகான ஆச்சரியங்களும், அதிசயங்களும் இருக்கத்தான் செய்கிறது. வியக்க வைக்கும் பிரம்மாண்ட மலைகளும், பறந்து விரிந்த கடலும், ஆச்சரியமூட்டும் வரலாற்று அதிசயங்கள் என நம்மை சுற்றி ஏராளம் உள்ளன.
அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த அனுபவத்தை பெற கண்டிப்பாக நீங்கள் காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படும் பூம்புகாரை தேர்வு செய்யலாம். சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது பூம்புகார். பூம்புகார் ஒரு கடல் நகரமாகும். பறந்து விரிந்த கடலும், அதன் கரையோரம் கொட்டப்பட்டுள்ள பெரிய பெரிய பாறைகளும் கடலின் அழுகை மேலும் எழிலூட்டும். கடல் சார்ந்த அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ். மயிலாடுதுறை, சீர்காழியிலிருந்து தலா இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு சிறப்பு:
அழகை ரசித்து குதூகளிக்க மட்டுமல்ல, வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய இடமாகவும் திகழ்கிறது பூம்புகார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கதை மாந்தர்களும், கதைக்களமும் பூம்புகாரையே கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள சிலப்பதிகார கலைக்கூடம் நாம் பார்க்க தவற கூடாத இடமாகும். இந்த கலைக் கூடத்திலிருந்து வெளியில் வந்தவுடன் கதை மாந்தர்களான கோவலன், கண்ணகி மாதவி போன்றவர்களின் இருத்தலை நம்மால் உணர முடியும். சிலப்பதிகாரத்தில் புகார் நகரம் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம். ஆறும், கடலும் சங்கமிக்கும் பெருமையையும் கொண்டுள்ளது.
காவிரி ஆறு குடகு மலையில் தொடங்கி கடலில் புகும் இடம் என்பதால் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் உள்ளது. சங்க காலத்தில் பூம்புகார் தலைநகராக விளங்கியது என்பதற்கு பல ஆதாரங்கள் இன்றளவும் உள்ளன. காலம் மாற்றத்திலும், இயற்கை சீற்றத்தாலும், ஆழிப்பேரலையிலும் அழிந்து போனதாக அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முன்னொரு காலத்தில் இது ஒரு வாணிப நகரமாக விளங்கியதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2004 -ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் சிதைந்த கிளிஞ்சல் மண்டபங்களும், கடலின் கரையோரம் அமைந்திருக்கும் அம்மன் கோயிலும், கம்பீரமாக வீற்றிருக்கும் கண்ணகி மற்றும் இளங்கோவடிகள் சிலையும் மேலும் நாம் பார்ப்பதற்கான அம்சங்கள்.
கடல் உணவு :
இவ்வளவும் பார்த்துவிட்டு நாம் சாப்பிடாமல் வந்தால் எப்படி? நாம் சென்று இறங்கியவுடன் நம்மை வரவேற்பது கடல் அலைகளின் கைத்தட்டல்களும், கருவாட்டு மனமும், மீன் பொரிக்கும் வாசனையும் நம்மை சுண்டி இழுக்கும். அசைவ உணவை உண்பவர்களுக்கு கூடுதல் இனி அனுபவமாக அமையும். சுடச்சுட மீன் சாப்பிட்டுவிட்டு, விதவிதமான கருவாடுகளையும் வாங்கி வரலாம்.
கலைப் பொருட்கள்:
கடல் கிளிஞ்சலாலும், சங்கினாலும் செய்யப்பட்ட விதவிதமான ஆபரணங்களும், கலைப் பொருட்களும், விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி செல்லலாம். எந்த கால நிலையிலும் பூம்புகார் ரசிக்கத்தக்க இடமாகவே இருக்கும். இந்த துரித வாழ்க்கையில் சற்று இளைப்பாற கடலோடு நடக்க, கால் நனைக்க, குதூகலிக்க குடும்பத்தினர்களோடோ நண்பர்களோடோ வர ஏற்ற இடம் தான் இந்த பூம்புகார்.