சென்னை To கொடைக்கானல் ‘லோ பட்ஜெட் ட்ரிப்..’ 510 ரூபாய் போதும்.. ஜாலியா போயிட்டு வாங்க..!
Kodaikanal low budget trip: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கொடைக்கானலுக்கு தினமும் நேரடி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மலைகளின் இளவரசி என அழைக்கக்கூடிய கொடைக்கானல் எப்போதுமே, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்க்க சலிக்காத இடமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற, எண்ணம் அனைவருக்கும் தோன்றாமல் இருக்காது. பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு, குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது மனதிற்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சென்னையில் இருப்பவர்கள் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களுக்கு செல்லும்போது அதிக அளவு, போக்குவரத்து செலவு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. குறைந்த விலையில் கொடைக்கானல் போன்ற, இடங்களுக்கு எப்படி செல்வது என்பது குறித்த, தகவல்களைத் தொடர்ந்து Travel with ABP வாயிலாக பார்த்து வருகிறோம்.
கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள் ?
கொடைக்கானலில் பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தாலும் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களாக, டெவில் கிச்சன் (Devil's kitchen) , குக்கல் குகைகள் (Kukkal Cave), கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகள், ராக் பில்லர் ( Kodaikanal Rock Pillar), பெரிஜம் ஏரி ( Berijam Lake), டால்பின் நோஸ் (Dolphin’s Nose), பூம்பாறை (Poombarai ) உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
சென்னையில் இருந்து குறைந்த விலையில் செல்வது எப்படி ?
சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு தனியாக கார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சென்றோம் என்றால், பல ஆயிரம் ரூபாய் செலவு எடுக்கும். அதுவே சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி சென்று விட்டு, அங்கு செல்வதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் அல்லது உள்ளூர் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் பெருமளவு செலவு குறையும்.
கிளாம்பாக்கம் To கொடைக்கானல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு, தினமும் நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், இயக்கப்படும் பேருந்துகளில் மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கொடைக்கானலுக்கு செல்போர்களுக்கு குறைந்தபட்ட கட்டணமாக 510 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவே ஏ.சி., பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக 665 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி இல்லாத பேருந்தில், ஸ்லீப்பருக்கு கட்டணம் 780 ரூபாய், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் ஸ்லீப்பர் கட்டணம் 1002 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் டூ கொடைக்கானல் பேருந்து டைமிங்
கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு, குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இது கொடைக்கானலுக்கு காலை 5:00 மணிக்கு சென்று சேரும்.
அதற்கு அடுத்த அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து 6:30 மணிக்கு கிளாம்பாகத்தில் இருந்து புறப்படுகிறது, இந்தப் பேருந்து கொடைக்கானலுக்கு மறுநாள் காலை 5:30 மணிக்கு சென்றடையும். இந்தப் பேருந்தில் ஸ்லீப்பர் வசதி இல்லை.
இதற்கு அடுத்த பேருந்தாக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து 7:00 மணிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த பேருந்து கொடைக்கானலுக்கு காலை 6:00 மணிக்கு சென்றடையும். இந்தப் பேருந்தில் ஸ்லீப்பர் வசதி உள்ளது.
பேருந்து நேரம் உள்ளிட்ட தகவல்களை சரியாக தெரிந்து கொள்ள, TNSTC வெப்சைட்டை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதைவிட லோ பட்ஜெட் என்ன ?
இதைவிட மிகக் குறைந்த விலையில் சென்னையிலிருந்து, கொடைக்கானலுக்கு செல்ல விரும்புபவர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக திண்டுக்கல்லுக்கு சென்றடைந்து. திண்டுக்கல்லில் இருந்து பேருந்து மூலமாக, கொடைக்கானலுக்கு சென்றடையலாம். இவ்வாறு செல்லும் போது பயணச் செலவு 300 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
கொடைக்கானல் டூ கிளாம்பாக்கம்
இதேபோன்று மாலை மற்றும் இரவு வேலைகளில் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் உள்ளன. பேருந்து நேரம் உள்ளிட்ட தகவல்களை சரியாக தெரிந்து கொள்ள, TNSTC வெப்சைட்டை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.