WhatsApp Policy | 'நாங்க மட்டுமா? அவங்களும் தான்' -பாலிசி விவகாரத்தில் மற்ற சில செயலிகளை மாட்டிவிட்ட வாட்ஸ் அப்!
தாங்கள் குறிப்பிடும் அதே தகவல்களைத்தான் சொமாட்டோ, ஓலா, ஆரோக்ய செயலி போன்ற ஆப்களும் பயனர்களிடம் இருந்து பெறுவதாக நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது
வாட்ஸ் அப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. ஆனாலும் வாட்ஸ் அப்பின் புதிய பாலிசி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வாட்ஸ் அப் பாலிசி அப்டேட்க்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த வாட்ஸ் அப், தங்கள் தரப்பு விளக்கங்களை குறிப்பிட்டுள்ளது.
அதில், ''இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பல செயலிகளும் தங்கள் கூறும் அதே தகவல்களை பயனர்களிடம் பெறுகின்றன. சொமாட்டோ, ஃஜூம், ஓலா, கூ,ட்ரூ காலர், பிக் பாஸ்கர் உள்ளிட்ட பல ஆப்கள் பயனர்களின் தகவல்களை பெறுபவை தான். இந்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியும் கூட பயனர்களின் தகவல்களை பெறத்தான் செய்கிறது’’ என தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் தரப்பு, ’’இந்த புதிய பாலிசி நடைமுறை செய்யவில்லை என்றால் இந்தியாவில் இருக்கும் டெக் நிறுவனங்களில் செயல்பாடுகள் பல பாதிக்கப்படும். ஏனென்றால் சில நிறுவனங்கள் வீட்டுக்கு மளிகை பொருட்களை கூட அனுப்புகின்றன. அந்த நிறுவனங்களுக்கும் பாதிப்பு’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக,புதிய நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது வாட்ஸ் அப். குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ் அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய், பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழையப் பார்த்தன.
சுதாரித்துக்கொண்ட வாட்ஸ் அப் நிபந்தனைக்கான கால நேரத்தை நீட்டித்தது. அதாவது வரும் 15ம் தேதி தான் வாட்ஸ் அப் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி தேதி ஆகும். வாட்ஸ் அப் ஏற்கெனவே தெரிவித்த அறிவிப்பின்படி, நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாத கணக்குகள் டெலிட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மே 15க்கு பிறகு நிச்சயம் எந்த கணக்குகளும் டெலிட் செய்யப்படாது. மேலும் சில வாரங்களுக்கு பயனாளர்களிக்கு கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இதுநாள் வரை வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இருந்த பிரச்னை, இத்தோடு முடியுமா... அல்லது அது குறிப்பிட்டுள்ள நிறுவனங்களையும் சேர்த்து இழுத்து வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.