Watch Video: மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு… க்ரிப்டோகரன்சியில் மொய்… ஆசியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்!
"என் மாமனார் கடந்த வருடம் ஏப்ரலில் இறந்துவிட்டார். அவர் என்னையும் எனது மனைவியையும் திருமணத்தில் கலந்துகொண்டு ஆசிர்வதித்தார்"
தமிழகத்தை சேர்ந்த இணையர் தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மெட்டாவெர்சில் நடத்தி அசத்தியுள்ளனர். இது ஆசியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம் என்று பெயர்பெற்றுள்ளது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் இணைய வசதியால் தொடர்பு கொள்ள முடிகிறது. நேரில் கண்டிராத ஒருவரை கூட சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கி கொள்ள முடிகிறது. இந்த இணைய உலகின் அடுத்த கட்டம் தான் மெட்டா வெர்ஸ். META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பதுதான் இதன் அர்த்தம். இதில் தான் இந்த தம்பதியர் ஒரு திருமனத்தையே நடத்தி முடித்துள்ளனர். கொரோனா காலத்தில் எவ்வளவோ வித்யாசமான திருமணங்களை நாம் கண்டுவிட்டோம், ஆனால கொரோனா வழிவகுத்த முற்றிலும் வேறான ஒரு திருமணமாக இது இருக்கிறது.
Exploring, checking into Asia's 1st Metaverse Wedding. Interesting experience. @beyondlifeclub @TardiVerse @kshatriyan2811 pic.twitter.com/AbrmTtUti8 pic.twitter.com/C8NhmudWmn
— Abhinav Gupta (@abhinavguptas) February 6, 2022
எஸ்.பி. தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ராமசாமி என்னும் இவர்தான் இந்த திருமண ஜோடி. பிப்ரவரி 6 அன்று தமிழகத்தின் ஒரு சிறிய பழங்குடி கிராமமான சிவலிங்கபுரத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவர்களது திருமண வரவேற்பை காண்பதற்காக மெய்நிகர் உலகில் அதனை நடத்தி முடித்துள்ளனர். தினேஷ் பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக 100 நபர்களை வைத்து மட்டுமே திருமணம் நடத்தவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் எல்லோரும் திருமணத்தை காண வேண்டும் என்பதால் 100 பேரை வைத்து திருமணம் நடத்திவிட்டு, திருமண வரவேற்பை மட்டும் மெட்டாவெர்சில் நடத்தினோம். நான் கடந்த ஒரு வருடமாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்தான் பணிபுரிந்து வருகிறேன்" என்று கூறினார்.
தினேஷும் ஜனகநந்தினியும் ஹாரிபார்ட்டார் ரசிகர்கள் என்பதால் தங்களது திருமணத்திற்காக ஹாக்வார்ட்ஸ் தீமை பயன்படுத்தி இருந்தனர். டார்டிவெர்ஸ் என்னும் ஸ்டார்ட்டப் நிறுவனம் தான் 1 மாத காலம் உழைத்து இவர்களுக்கு இந்த மெட்டாவேர்ஸ் திருமண நிகழ்வை நடத்த உதவியிருக்கிறது. இதில் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையை மட்டும் இன்றி, விழாவிற்கு வருகை தந்த உறவினர்களையும் உருவாக்கியிருந்தர்கள். மணமகள் ஜனகநந்தினியின் இறந்துபோன தந்தையையும் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். "என் மாமனார் கடந்த வருடம் ஏப்ரலில் இறந்துவிட்டார். அவர் என்னையும் எனது மனைவியையும் திருமணத்தில் கலந்துகொண்டு ஆசிர்வதித்தார். இது மெட்டாவெர்சால் மட்டுமே சாத்தியம்." என்று தினேஷ் கூறினார். இந்த திருமண வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகின, அதில் ஒரு விடியோவில் சென்னையில் இருந்து ஒரு இசை கச்சேரியும் நடந்தது.
At @kshatriyan2811 's meta wedding 👰💍🤵💒 @TardiVerse #asiasfirst #Metaverse #metawedding pic.twitter.com/RRGyEzUz4Y
— cryptopangu.nft (@CryptoPangu) February 6, 2022
மெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன்முதலில் 1992-ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் Snow Crash என்ற அறிவியல் கதையில் வெளியானது. மக்கள் தங்களுக்கென அவதார்களை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் மெய்நிகர் உலகம்தான் மெட்டாவெர்ஸ் என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல்தான் ரெடி பிளேயர் ஒன். இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இதனை 2018ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டிருந்தார். தற்போதுள்ள Roblox, Fortnite ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச்செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி.
இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழ செய்யும் இடம் தான் மெடாவெர்ஸ். இந்த தொழில்நுட்பம் இனி,மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச்செய்ய போகிறது. கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணத்தை கொண்டு விர்ச்சுவல் நிலங்களை வாங்கி நமக்கு பிடித்தமான சூழலை உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Entry gate - pic.twitter.com/dZp6p1m13J
— Divit (@divitonchain) February 6, 2022
தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்துகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் விர்ச்சுவல் விளையாட்டு தளமான ஆக்யூலஸ் ஆகியவற்றை மெட்டாவெர்ஸ் மூலம் இணைத்து புதிய தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவது மார்க் ஜூக்கர்பர்கின் திட்டம். சென்னை ஐஐடியில் ப்ராஜக்ட் அசோசியேட்டாக இருந்த தினேஷ் இந்த யோசனை எவ்வாறு தோன்றியது என்று கூறுகையில், "திருமண வரவேற்பை மெட்டாவெர்சில் நடத்தினால் என்ன என்று எனகுன்னூறு யோசனை தோன்றியதும், என் மனைவியிடம் கூறினேன். அவருக்கும் பிடித்ததால் அது குறித்த வேலைகளை தொடங்க ஆரம்பித்தேன். நான் க்ரிப்டோகரன்சி, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் துறையில் இயங்கி வருவதால் இதனை அணுகுவது எளிதாக இருந்தது. மெட்டாவெர்சின் அடிப்படைதான் இவை.
ஒரு வருடமாக இந்த துறையில் இருக்கும் நேரத்தில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டதால் இப்படி செய்தால் என்ன என்று தோன்றியது" என்று கூறினார். இந்த திருமணத்தில் மோய் எழுதுவதற்கு டொஜ்காயினை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கான பேமெண்ட் லிங்க் விழா வாயிலின் தூணில் கியூஆர் கோடாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.