VPN Usage in India: இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்த VPN.! காரணம் இதுதான்!
விபிஎன் பயன்பாடு இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்தியாவில் VPN பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 600% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த புள்ளிவிவரத்தை பார்ப்பதற்கு முன்பு, முதலில் VPN என்றால் என்னவென்பதை பார்க்கலாம்.
VPN என்பது விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் (Virtual Private Network). அதாவது விபிஎன் பயன்படுத்தும் போது உங்களுடைய தகவல் அனைத்தும் பாதுகாப்பாக ஒரு விபிஎன் சர்வர் மூலம் மறைக்கப்பட்டு செல்லும். அதாவது உங்களுடைய ஐபி முகவரி மாறி செல்லும். இதனால் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா, அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து தேடுவது போல் காட்ட முடியும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், உங்களுடைய லேப்டாப், கணினி அல்லது மொபைல் போன் ஆகியவற்றில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது நீங்கள் ஒரு தகவலை தேட அல்லது அனுப்ப முற்படுவீர்கள்.
அப்போது உங்களுடைய கருவிக்கு ஐபி முகவரி என்ற எண் அளிக்கப்படும். இந்த ஐபி முகவரி மூலம் உங்களுடைய தரவுகள் இணையத்தில் செல்லும். அதாவது நீங்கள் ஒரு கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்கும் போது உங்களை எப்படி பெயர் அல்லது ஒரு நம்பர் வைத்து அரிய முடியுமோ அப்படி தான் இந்த ஐபி முகவரியும். இந்த ஐபி முகவரி வைத்து நீங்கள் இணையதளத்தில் தேடுவது, செல்லும் வலைத்தளங்கள் மற்றும் உங்களுடைய சமூக வலைத்தள கணக்குகள் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நீங்கள் உங்களுடைய தகவல் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பார்க்ஸி சர்வர் அல்லது விபிஎன் பயன்படுத்த வேண்டும்
இப்போது இந்த விபிஎன் பயன்பாடு தான் இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம். 2021ன் முதல் பாதியில் விபிஎன் பயன்பாடு 7 மடங்கு அதிகரித்துள்ளது. இண்டர்நெட் முடக்கம், இந்தியாவில் பல இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டது, கொரோனா ஊரடங்கால் வொர்க் ப்ரம் ஹோம் முறை இவையெல்லாம் தான் விபிஎன் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறது புள்ளிவிவரம். உலக அளவில் விபிஎன் பயன்பாட்டில் கதார், யூஏஇ, சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள விபிஎன் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர், '' இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தற்போது தான் அதிகரித்து வருகிறது. 2015ம் ஆண்டோடு ஒப்பிட்டால் 2020ல் இந்தியாவின் இண்டர்நெட் பயன்பாடு 50% அதிகரித்துள்ளது. 19% இந்திய மக்கள் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பல இடங்களில் இண்டர்நெட் முடக்கப்பட்டதே விபிஎன் பயன்பாட்டுக்கு முக்கிய காரணம். 2021ல் மட்டும் இந்தியாவில் 21 முறை பல்வேறு இடங்களில் இண்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பலர் வேலை பார்ப்பதால் விபிஎன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றார்.