Twitter: யாரைக்கேட்டு கொடுத்தீங்க? சிக்கலில் சிக்கிய ட்விட்டர்! ரூ.1160 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!
ட்விட்டரின் மீது பயனர்களின் பாதுகாப்பு தொடர்பான பகிரங்க குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது தொடர்பான உத்தரவில் ரூ.1160 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ட்விட்டர்..
ஒரு செய்திகளையோ , தகவல்களையோ’ நச்’ என்று சுருக்கமாக சொல்ல வேண்டும் என விரும்புவர்களின் தேர்வு ட்விட்டராகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர், சினிமா, விளையாட்டு என அனைத்து தரப்பினரும் கருத்து பதிவிடும் இடமாகவே இருந்து வருகிறது ட்விட்டர். ட்விட்டரில் பேசத்தொடங்கினால் அது நாட்டின் தலையெழுத்தைக் கூட மாற்றலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் அமெரிக்க தேர்தலின்போதுகூட ட்விட்டர் பதிவுகள் அதிகம் கவனிக்கப்பட்டன.இந்நிலையில் ட்விட்டரின் மீது பயனர்களின் பாதுகாப்பு தொடர்பான பகிரங்க குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு..
230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் ட்விட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் செல்போன் எண், இமெயில் ஐடியை சேமித்து வைக்கும் என தொடக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் சொன்னதை மட்டுமே செய்யாமல் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ட்விட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ட்விட்டரின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது.அதேவேளையில் ட்விட்டரை நம்பிய பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு நீதிமன்றபடியேறியது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் விசாரித்தது. ட்விட்டருக்கு எதிராக வாதாடிய ஃபெடரல் டிரேட் கமிஷன் ட்விட்டரை லெப்ட் ரைட் வாங்கியது. உங்களை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் ட்விட்டர் பல மடங்கு லாபத்தையும் சம்பாரித்துள்ளது என வாதாடியது.
ட்விட்டர் பதில்..
தொடர் குற்றச்சாட்டுக்கு மழுப்பலான பதிலையே தெரிவித்த ட்விட்டர், தனியுரிமைக்கு மதிப்பளிப்பதும், தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் எங்களுக்கு தலையாய கடமை. அதனை தீவிரமாகவே பின்பற்றுகிறோம். பெடரல் டிரேட் கமிஷனுடனும் நாங்கள் ஒத்துழைப்பை நல்குகிறோம் எனக் குறிப்பிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் ட்விட்டருக்கு அபராதத்தை விதித்துள்ளது கூட்டாட்சி நீதிமன்றம்.அதன்படி ட்விட்டர் பயனகளின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 1160 கோடி ரூபாய் ஆகும். இதனிடையே இந்த அபராதத்தொகையை செலுத்த ட்விட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.
அமைதி காக்கும் மஸ்க்..
ட்விட்டர் மீதான குற்றச்சாட்டு குறித்தும், அபராதம் தொடர்பான விவகாரம் குறித்தும் எலான் மஸ்க் கருத்து ஏதும் கூறவில்லை. ட்விட்டரை வாங்கப்போகிறேன் என பரபரவேன ஓடிய எலான் திடீரென பின் வாங்கினார்.ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தால் மட்டுமே, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.