“சார் உங்க போனுக்கு வந்த ஓடிபி சொல்லுங்க “ - பணத்தை பறிக்கொடுத்த ஐடி ஊழியர் !
படித்த இளைஞர் ஒருவரே இப்படி நூதன திருட்டில் சிக்கி பணத்தை பறிக்கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”சார் நாங்க பேங்ல இருந்து பேசுறோம், உங்க ஏ.டி.எம் கார்ட் நம்பரை சொல்லுங்க சார் “ என்ற எதிர்முனை அழைப்பை நம்மில் பலர் கடந்து வந்திருப்போம். தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி நூதன திருட்டில் ஈடுபடும் கும்பல்கள்தான் இவை. இது குறித்த விழிப்புணர்வை அரசும், வங்கிகளும், காவல்துறைகளும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் இந்த கும்பல்களிடம் சிக்கி பணத்தை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா சூழல் காரணமாக, கடந்த ஒருவருடமாக வீட்டில் இருந்து வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் ஃபோன் பே என்ற செயலி மூலமாக பணபரிவர்த்தனை ஒன்றை செய்துள்ளார். அதாவது தனது சம்பள கணக்கில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை தனது தனிப்பட்ட கணக்கிற்கு ‘போன் பே’ செயலி மூலம் மாற்றியுள்ளார். ஆனால் ‘something went wrong' என்ற எரர் காட்டியுள்ளது.
இது தொடர்பாக போன் பே வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் அளித்துள்ளார் அந்த இளைஞர். சிறிது நேர இடைவெளியில் அந்த நபருக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அழைத்த அந்த நபர் உங்களது விவரங்களை ஃபோன் பே செயலியின் குறிப்பிட்ட பக்கத்தில் பதிவு செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். அந்த நபரும் அவ்வாறே செய்திருக்கிறார். பின்னர் “ உங்க எண்ணிற்கு ஒரு ஓடிபி வந்திருக்கும் சார் அதை சொல்லுங்க “ என கேட்க, சற்றும் யோசிக்காத ஐடி ஊழியர் எண்ணை எதிர்முனையில் பேசிய வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிக்கு தெரிவித்துவிட்டார். அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உடனே ஐடி இளைஞரின் வங்கி கணக்கில் இருந்த 9 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனதற்கான மெசேஜ் வந்துள்ளது. மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட இளைஞருக்கு முறையான பதில் கிடைக்காததால். அவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
படித்த இளைஞர் ஒருவரே இப்படி நூதன திருட்டில் பணத்தை பறிக்கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி எண், ஏடிஎம் எண், சிவிவி எண் முக்கியமாக தொலைபேசிக்கு வரும் ஓடிபி எண் ஆகியவற்றை யாருக்கும் பகிரக்கூடாது, வங்கிகளில் இருந்தும் கூட மேற்கண்ட எதையும் தொலைபேசி வாயிலாக கேட்க மட்டார்கள் என வங்கிகளே அறிவுறுத்தி வரும் நிலையில் இப்படியான மோசடியில் சிலர் சிக்குவது வருத்தமளிக்ககூடியதாகவே இருக்கிறது.