Chewing Gum| கொரோனாவுக்கு எதிரான போரில் சுவிங்கம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
கிட்டத்தட்ட 50 மில்லிகிராம் சுவிங்கத்தின் மூலம் 95% கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதுதான் ஆராய்ச்சியார்களின் கருத்து.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. COVID 19 என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லி வைரஸானது இன்று பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.இந்த வைரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் அந்த மாதிப்பிலிருந்து மீளவில்லை என்றாலும் சமீப காலமாக கொரோனா தொற்றின் பரவல் சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் , மீண்டும் 23 நாடுகளில் அதன் புதிய பரிணாமமான ஒமிக்ரான் என்னும் வேரியண்டின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.ஓமைக்ரானின் தீவிரம் குறித்து இனி வரும் நாட்களில் நமக்கு தெரிய வரும் . இந்த நிலையில் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் சுவிங்கம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என கூறி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக பிரத்யேக சுவிங்கம் ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.தாவரத்திலிருந்து பெறப்பட்ட ACE2 புரதங்களைக் கொண்டு இவ்வகை சுவிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ACE2 புரத மூலக்கூறுகளை சேதப்படுத்தாமல் பல ஆண்டுகளாக சாதாரண வெப்பநிலையில் சேமிக்க முடியுமாம். அதன் மூலம் உருவாக்கப்பட்ட சுவிங்கத்தை சுவைப்பதன் மூலம் பரவும் திறன் கொண்ட வைரஸ்கள் சுவிங்கம் மற்று ஈறுகளிலேயே தங்கிவிடுவதால் இருமல் மற்றும் பேசுவதன் மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் . சோதனையின் போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உமிழ் நீரில் இருந்து பெறப்பட்ட வைரஸுடன் தாங்கள் கண்டறிந்த சுவிங்கத்தினை கலந்துள்ளனர். ஆய்வின் முடிவில் சுவிங்கம் வைரஸ்களை இறுக பற்றிக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண சுவிங்கத்தை வைத்து இதே போல சோதனை செய்த பொழுது மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கிட்டத்தட்ட 50 மில்லிகிராம் சுவிங்கத்தின் மூலம் 95% கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதுதான் ஆராய்ச்சியார்களின் கருத்து. சுவிங்கம் இன்னும் ஆரம்ப-நிலை ஆராய்ச்சியில்தான் உள்ளது . இதனை மனிதர்களிடம் இன்னும் சோதிக்கவில்லை. மெல்லும் வகையில் உருவாக்கபப்ட்ட இயந்திரத்தின் உதவி கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தற்போது இது அடுத்தடுத்த சோதனைக்கு தயாராகி வருகிறது. இவ்வகை சுவிங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் , அது தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி கிடைக்கப்பெறதா நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதுதான் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து.