Third Eye Camera | அடடே! இதையும் கண்டுபிடிச்சுட்டாங்க.. மூன்றாவது கண் வேணுமா உங்களுக்கு?
செல்போன் அடிமையானவர்களுக்கு ஒரு ப்ரத்யேக தயாரிப்பை தென் கொரியாவில் கண்டுபிடித்துவிட்டார் ஒரு இளைஞர்..
கையில் ஃபோன் இருந்தால் எதிரே என்ன இருக்கிறது என்றே தெரியாமல் செல்லும் எத்தனையோ நபர்களை நாம் சாலையில் சந்திக்கலாம். கையில் உள்ள ஃபோனை நோண்டிக்கொண்டே எதிரே வருபவர்களை மோதுவார்கள், வாகனங்களில் குறுக்கே போய் விழுவார்கள், மாடிப்படியில் சறுக்குவார்கள். இது மாதிரியான செல்ஃபோன் அடிமைகளுக்கு ஒரு ப்ரத்யேக தயாரிப்பை தென் கொரியாவில் கண்டுபிடித்துவிட்டார் ஒரு இளைஞர். செல்ஃபோனுக்கு அடிமையானவர்களை சொல்லித் திருத்தாமல் அதுக்கு ஒரு கண்டுபிடிப்பா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் தேவைக்கு ஏற்பதான் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகின்றன.
ப்யாங் மின் வூக் என்ற 28 வயது இளைஞர் நெற்றிக்கண் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதாவது இதுதான் நமக்கு மூன்றாவது கண். ஒரு வித சென்சாரை நெற்றியில் ஒரு கண் போல பொருத்தியுள்ளார் அந்த இளைஞர். நீங்கள் எதிரே என்ன இருக்கிறது எனப் பார்க்காமல் செல்போனை பார்த்துக்கொண்டே சென்றாலும் உங்களுக்கு எதிரே ஏதேனும் தடை இருந்தால் ஒரு மீட்டருக்கு முன்னதாகவே அந்த மூன்றாவது கண் பீப் சத்தம் எழுப்பும். எதிரே ஏதோ இருக்கிறது என நீங்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டியதுதான்.
>>Apple to Android | ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறும் ஆப்பிள் பயனாளர்கள் - காரணம் என்ன?
இது குறித்து பேசிய இளைஞர் ப்யாங் மின், ”எதிர்காலத்தில் மனிதருக்கு மூன்று கண்கள் என்பதுபோல இது இருக்கும். நாம் செல்போனில் இருந்து கண்களை எடுக்க மறந்துபோனால் இனி இதுதான் நம் எதிர்காலம். வேறு வழியில்லை’’ என்கிறார்.
இரண்டு சென்சார்கள் இதில் இருக்கும். ஒரு சென்சார் கழுத்து எந்த அளவுக்கு வளைந்து இருக்கும் என கணிக்கிறது. நெற்றியில் இருக்கும் சென்சார் எதிரே இருக்கும் தடையை கணித்து எச்சரிக்கை செய்கிறது. கழுத்து வளைந்து இருந்தால் நெற்றியில் உள்ள சென்சார் விழித்துவிடும். அதாவது செல்போனை பார்க்கும் போது மட்டுமே நெற்றி சென்சார் வேலைசெய்யும். நீங்கள் நேராக பார்த்து சென்றால் பீப் சத்தம் எழுப்பாது.
சென்சாரை அணிந்துகொண்டு சாலையில் நடந்துசென்ற ப்யாங் மின் குறித்து பேசிய ஒருவர், ’’இவரை பார்த்தால் ஏலியனை போல இருக்கிறது. ஆனால் இது நல்ல கண்டுபிடிப்புதான். நிறைய இளைஞர்கள் சாலையை கவனிப்பதே இல்லை. அவர்களுக்கு இது உதவும். ஆனாலும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வரும்போது எந்த அளவுக்கு மக்கள் செல்போனுக்கு அடிமையாகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.
இந்த புதிய சென்சார் கண்டுபிடிப்பு குறித்து பதிவிட்டுள்ள பலரும் இது தேவைக்கான கண்டுபிடிப்பு என்றாலும், நாம் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சென்சாரை சற்று மாற்றி வடிவமைத்து கண் பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கலாம் எனவும் சிலர் ஐடியா கொடுத்து வருகின்றனர்.
>>Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!