விண்வெளிக்கு சுற்றுலா: ஒரு டிக்கெட்டின் விலை 2.5 லட்சம் டாலராக நிர்ணயம்..!
விண்வெளி சுற்றுலா துறையில் வரும் காலத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களம் இறங்கும் என ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்திருக்கிறார்.
ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கே மாத கணக்கில் சேமிக்க தொடங்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில் விண்வெளி சுற்றுலாவை தொடங்கி வைத்திருக்கிறார் ரிச்சர்ட் பிரான்ஸன். விர்ஜின் அட்லாண்டிக் என்னும் விமான நிறுவனத்தின் நிறுவனர் இவர். இவரது மற்றொரு நிறுவனமான விர்ஜின் கலாட்டிக் virgin galactic நிறுவனத்தின் மூலம் ராக்கெட் விமானத்தில் விண்வெளிக்கு பயணம் சென்று வந்திருக்கிறார்.
2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சுமார் 17 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த சுற்றுலான ராக்கெட் விமானம் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
யுனைட்டி என்னும் ராக்கெட் விமானத்தில் 71 வயதான ரிச்சர்ட் பிரான்ஸன் மற்றும் குழுவினர் ஐந்து நபர்கள் விண்வெளிக்கு (ஜூலை 11, 2021) சென்று வந்திருக்கின்றனர். நியு மெக்ஸிகோ பாலைவனத்தின் மேலே 88 மைல்களுக்கு மேலே பறந்திருக்கின்றனர். மூன்று நான்கு நிமிடம் அளவுக்கு புவியீர்ப்பு விசையில் இருந்து விடைபெற்று எடையில்லாத தன்மையை உணர்ந்திருக்கின்றனர். மேலும் அந்த உயரத்தில் இருந்து புவியை பார்த்தாக ரிச்சர்ட் பிரான்ஸன் தெரிவித்திருக்கிறார். மேலும் 17 ஆண்டு கால உழைப்புக்கு பயன் கிடைத்திருக்கிறது என்றும் குழுவினருக்கு வாழ்த்துகளையும் ரிச்சர்ட் தெரிவித்திருக்கிறார்.
சோதனை அடிப்படையில் செயல்பட்ட இந்த சேவை அடுத்த ஆண்டு முதல் வர்த்தக நோக்கில் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் விலை 2.5 லட்சம் டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 600 நபர்களுக்கு மேல் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் பயணிக்கு அதிக மக்கள் ஆர்வமாக இருக்கும்பட்சத்தில் கட்டணத்தை 40,000 டாலராக குறைக்கவும் விர்ஜின் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதில் ரிச்சர்ட் பிரான்ஸன் மனைவி மற்றும் குடும்பத்தினரும் உள்ளன. தவிர டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க்-ம் முன்பதிவு செய்திருக்கிறார். இவர் 10000 டாலர் கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறார். ஆனால் இவர் எப்போது விண்வெளிக்கு செல்வார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜூலை 20-ம் தேதி ஜெப் பியோஸ்
வர்த்தகரீதியிலான நடவடிக்கை தொடங்கப்படும் முன்பே போட்டி தொடங்கிவிட்டது. இந்த துறையில் அமேசான் நிறுவனர் ஜெப் பியோஸின் நிறுவனமான புளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவில் களம் இறங்க உள்ளது. New Shepard என்னும் ராக்கெட் விமானத்தில் வரும் 20-ம் தேதி ஜெப் பியோஸ் விண்வெளிக்கு செல்ல இருக்கிறார்.
விர்ஜின் நிறுவனம் விண்வெளி என வரையறுக்கப்பட்ட பகுதிக்கு செல்லவில்லை என புளூஆர்ஜின் தெரிவித்திருக்கிறது. பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள பகுதி `கர்மன் எல்லை’ என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பகுதி பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் விர்ஜின் நிறுவனம் 88 கிலோமீட்டர் வரை மட்டுமே சென்றது. அதனால் இதனை விண்வெளி சுற்றுலா என குறிப்பிட முடியாது என புளூஆர்ஜின் தெரிவித்திருக்கிறது.
ஆனால் 80 கிலோமீட்டருக்கு (50 மைல்) மேலே சென்றாலே விண்வெளி என நாசா விண்வெளி என நிர்ணயம் செய்திருக்கிறது. அதனால் நாங்கள் விண்வெளிக்கு சென்றோம் என விர்ஜின் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. விர்ஜின் நிறுவனம் 2.5 லட்சம் டாலர் என டிக்கெட் நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் புளூஆர்ஜின் இன்னும் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யவில்லை.
இந்த இரு நிறுவனங்களை போல எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது. ஆல்பபெட் மற்றும் பிடிலிட்டி ஆகிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றன. இந்த நிறுவனம் விண்வெளிக்கு செல்வது மட்டுமல்லாமல் நிலா மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் திட்டத்தையும் வைத்திருப்பதாக தெரிகிறது. தவிர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 10 நாள் சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருக்கிறது.
விண்வெளி சுற்றுலா துறையில் வரும் காலத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களம் இறங்கும் என ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்திருக்கிறார்.
300 கோடி டாலர் சந்தை
விண்வெளி சுற்றுலா என்பது பெரும் சந்தையாக வரும் காலத்தில் மாறும் என யுபிஎஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. 2030-ம் ஆண்டு 300 கோடி டாலர் துறையாக விண்வெளி சுற்றுலா மாறும் என யுபிஎஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. சர்வதேச அளவில் 1 கோடி டாலருக்கு மேலே சொத்து உடையவர்கள் 17 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள். 50 லட்சம் டாலர் முதல் 1 கோடி டாலர் வரையில் சொத்து உடையவர்கள் 35 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள்.
அதனால் வரும் காலத்தில் விண்வெளி சுற்றுலா என்பது பெரும் வாய்ப்புள்ள துறையாக மாறும் என யுபிஎஸ் கணித்திருக்கிறது. விண்வெளி சுற்றுலா அடுத்த பேஷன் ஸ்டேட்மெண்ட்-ஆக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.