Elon Musk: "தலைமை பொறுப்பில் இருந்து விலகவா?…" - ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தும் எலான் மஸ்க்!
பிற சமூக ஊடக தளங்களில் உள்ள கணக்குகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் ட்விட்டர் கணக்குகளைத் தடை செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

கடந்த சில நாட்களில் ட்விட்டரில் கொள்கை மாற்றங்களைச் செய்த பிறகு, ட்விட்டர் சிஇஒ எலான் மஸ்க், ட்விட்டரில் தனது மில்லியன் கணக்கான பயனர்களிடம் "நான் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என்று கேட்டு ஒரு வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
"முன்னோக்கிச் செல்லும்போது, முக்கியமான கொள்கை மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு இருக்கும். மன்னிக்கவும். மீண்டும் நடக்காது," என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.
Going forward, there will be a vote for major policy changes. My apologies. Won’t happen again.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
மூன்றாவது ட்வீட்டில், "நீங்கள் விரும்புவதைக் கூறுகையில் கவனமாக இருங்கள், அது கிடைக்கக்கூடும்" என்று அவர் கூறினார்.
As the saying goes, be careful what you wish, as you might get it
— Elon Musk (@elonmusk) December 18, 2022
புதிய விதிமுறை காரணமா?
Facebook, Instagram மற்றும் Mastodon உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களில் உள்ள கணக்குகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் ட்விட்டர் கணக்குகளைத் தடை செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
"எங்கள் பயனர்கள் பலர் பிற சமூக ஊடக தளங்களில் செயலில் உள்ளதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இருப்பினும், ட்விட்டரில் சில சமூக ஊடக தளங்களை இலவசமாக விளம்பரப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று ட்விட்டர் சப்போர்ட் ட்வீட் செய்தது. "குறிப்பாக, Facebook, Instagram, Mastodon, Truth Social, Tribel, Nostr மற்றும் Post ஆகிய தளங்களுக்கான இணைப்புகள் அல்லது பயனர்பெயர்களைக் கொண்ட பிற சமூக தளங்கள் மற்றும் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கணக்குகளை அகற்றுவோம்" என்று அது மேலும் கூறியது.
விதிமுறை மாற்றங்கள்
மேலும், வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து க்ராஸ் போஸ்ட் செய்ய அனுமதி உண்டு என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. "மேலே பட்டியலிடப்படாத சமூக ஊடக தளங்களில் இணைப்புகள் அல்லது பயனர் பெயர்களை பதிவிடுவதும் இந்தக் கொள்கையை மீறுவதாக இல்லை." என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எலான் மஸ்க் ட்விட்டரில் இருந்த பத்திரிகையாளர்கள் பலருக்கு இடைக்கால தடை விதித்ததால் தான் 'மிகவும் கலக்கமடைந்ததாக' கூறினார், மேலும் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்றும் கூறினார்.
பத்திரிக்கையாளர்கள் கணக்குகள் நீக்கம்
கடந்த வியாழனன்று, எலன் மஸ்க் தலைமையிலான ட்விட்டர், பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியது. பின்னர் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டன. "ட்விட்டரில் நாங்கள் பார்த்த பத்திரிகையாளர்களின் கணக்குகள் தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டதால் நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்" என்று குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். பேச்சு சுதந்திரத்திற்கான ஒரு வெளி என்று கூறும் மேடையில் ஊடகக் குரல்களை அடக்கக் கூடாது என்றார். உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தணிக்கை, உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று ஐநா செய்தித் தொடர்பாளர் கூறினார்.





















