QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!
இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது.
தொழில்நுட்பம் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் போலீசாரும், வங்கிகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பல வழிகளிலும் மோசடி அரங்கேறி வருகிறது. மோசடியை ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதே ஒரே வழி என்பதுதான் உண்மையும் கூட. பேஸ்புக்கில் தெரிந்த நண்பர் போல கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது, வங்கியில் இருந்து தொலைபேசியில் பேசுவதைப்போல வங்கிக்கணக்கை தெரிந்துகொண்டு பணத்தை திருடுவது என டிஜிட்டல் திருட்டு தொடர்கிறது. அந்த வரிசையில் இப்படியும் செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரை என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். டிஜிட்டல் முறையை பின்பற்றும் துரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை பெற QR CODEஐ பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கான ஸ்கேனிங் கோடை கடை சுவரில் ஒட்டி வைத்துவிட்டு தன் வழக்கமான வேலையை பார்த்து வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை ஸ்கேன் செய்து போட்டுள்ளனர். ஆனால் துரை கணக்கில் பணம் சேரவே இல்லை. ஏதேனும் சிக்கலா என வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது தான் துரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்கேன் கோட் அவரது வங்கிக்கணக்கைச் சேர்ந்ததே இல்லை என தெரியவந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என சிசிடிவியை ஆராயந்த போது இருவர் இரவில் வந்து ஸ்கேன் கோடை மாற்றி ஒட்டிச்சென்றது தெரியவந்தது. இது போலீஸ் விசாரணைக்கு செல்ல இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் ஏற்கெனவே போன்பே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இந்த மோசடியை அவர்கள் எளிதாக செய்துள்ளனர். மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர் துரை கவனக்குறைவாக இருந்ததே இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
1.வங்கிக்கணக்குடன் தொடர்புடைய QR CODE ஐ கடையின் வெளிப்புறம் ஒட்டி வைத்தது
2.வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் போதெல்லாம் சரியான பெயருக்குத்தான் பணம் சென்றதா என சரி பார்க்கத் தவறியது
3.வங்கிக் கணக்குக்கு பணம் வந்தாலும், எஸ் எம் எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அந்த தகவல் தனக்கு வருகிறதா என்ற விவரத்தையும் சரி பார்க்க தவறியது.
இப்படி சில கவனக்குறைவே துரை ஏமாற காரணமாகவும் இருந்துள்ளது. இன்றைய தேதிக்கு கடைகளில் QR CODE என்பது மிக அத்தியாவசியமானதாக ஆகிவிட்டது. வாடிக்கையாளர்களும் QR CODEஐ நம்பியே பல கடைகளுக்கு செல்கின்றனர். எனவே டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
தற்போது ஸ்பீக்கருடன் கூட QR CODE அறிமுகமாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால் உடனடியான எவ்வளவு பணம் செலுத்தினார்கள் என குரல் ஒலிக்கும். இதன் மூலம் உடனுக்குடன் பணம் செலுத்துவதை அறிந்துகொள்ளலாம்
தினமும் வங்கிக்கணக்கை சரி பார்க்க வேண்டும். எஸ் எம் எஸ் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் அன்றைய தினத்திற்கான தொகை சரியாக வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
QR CODE என்பது பணப்பெட்டி போல., எனவே அதனை கண்ட இடத்தில் ஒட்டி வைக்காமல். பார்வைக்கு அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். கடை மூடும் போது QR CODEஐ உள்ளே எடுத்து வைத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
QR CODEல் ஏதேனும் சிக்கலை உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியையோ, QR CODE பொருத்திய நிறுவனத்தையே தொடர்புகொண்டு சிக்கலை சரிசெய்துகொள்ள வேண்டும்.
செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?