செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?
உங்களுடைய மொபைல் போன் திருடி போய்விட்டால் வங்கி விவரங்களை உள்ளிட்டவற்றை பாதுகாப்பது எப்படி தெரியுமா?
நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக நம்முடைய மொபைல் போன் ஆகிவிட்டது. டிஜிட்டல் உலகில் நம்முடைய முக்கிய கருவியாக மொபைல் போன் தான் உள்ளது. பணப்பரிவர்த்தனைகள் முதல் உணவு ஆர்டர், கேப் புக் செய்வது எனப் பல தரப்பட்ட விஷயங்களுக்கு மொபைல் போன் மிகவும் அத்தியாவசியமாகிறது. இந்தச் சூழலில் நம்முடைய மொபைல் போன் திருடி போகிவிட்டால் நம்முடைய முக்கியமான விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும்.
உதாரணமாக பிரேசில் நாட்டில் ஒரு பகுதியில் குறிவைத்து பலரின் ஐபோன்கள் திருடி போகியுள்ளது. இவ்வாறு திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து வங்கி விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் பல ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக நாட்டில் மொபைல் போன் திருட்டு போனால் பெரியளவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மொபைல் போன் திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியவை என்னென்ன?
சிம் கார்டு பிளாக்:
முதலில் மொபைல் போன் திருடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்களுடைய சிம் கார்டை பிளாக் செய்ய வேண்டும். இதை செய்ய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு கட்டணம் இல்லா எண்களை அறிவித்துள்ளனர். அதை பயன்படுத்தி நாம் இதை செய்ய வேண்டும். நீங்கள் புதிய மொபைல் வாங்கிய பிறகு அதே எண்ணில் மற்றொரு சிம் கார்டு பெற்று கொள்ளலாம்.
வங்கி கணக்கில் மொபைல் வங்கி சேவைகளை நிறுத்த வேண்டும்:
திருடு போன உங்களுடைய வங்கி கணக்கின் மொபைல் வங்கி சேவைகளை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை செய்வதற்கு எளிய வழி உங்களுடைய சிம் கார்டை பிளாக் செய்தால் போதும். ஏனென்றால் தற்போது அனைத்து வங்கிகளின் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றிற்கு ஓடிபி எண் கேட்கிறது. ஆகவே அது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும். அது இல்லாமல் எந்தவித வங்கி சேவையையும் செய்ய முடியாது.
யுபிஐ பின்னை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்:
வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. ஆகவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ பின் அல்லது கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும்.
கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகள் கணக்கை முடக்க வேண்டும்:
கடைசியாக நீங்கள் திருடப்பட்டிருந்த மொபைல் போனில் கூகுள் பே மற்றும் பேடிஎம் பயன்படுத்தி இருந்தால் அதன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அந்த கணக்குகளை முடக்க வேண்டும். இதன் மூலம் இந்த செயலிகளிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்க முடியும்.
காவல்துறை புகார்:
இந்த வேலைகள் செய்தவுடன் அருகே இருக்கும் காவல்துறையில் ஒரு புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பெற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவேளை உங்களுடைய வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை வைத்து நீங்கள் வங்கியில் புகார் அளிக்க முடியும். ஆகவே காவல்துறை புகாரும் மிகவும் முக்கியமான ஒன்று.
மேலும் படிக்க: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் வோடஃபோனின் அசத்தல் ஆஃபர்..!