Mobile Phone Stolen: ஸ்மார்ட் போன் தொலைஞ்சு போச்சா.. உடனே இதெல்லாம் பண்ணுங்க.. சைபர் க்ரைம் நிபுணர் பேட்டி..!
மொபைல்ஃபோன் தொலைந்துவிட்டால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
எல்லாமே டிஜிட்டல் மையமாக மாறியிருக்கும் இந்த நவநாகரிக உலகில், அதைக் கடைக்கோடி சாமானியன் வரைக்கும் கொண்டு சேர்க்கும் அச்சாரப்புள்ளியாக ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கின்றன. பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் தலைவர்கள் கூட ஸ்மார்ட்ஃபோன் என்று வந்துவிட்டால் கொஞ்சம் செலவு செய்து நல்ல ஃபோனாக எடுக்கலாமே என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த ஏக்கத்தையும், ஆசையையும் கனகச்சிதமாக பயன்படுத்தும் இந்த கார்ப்பரேட் உலகம், வித விதமான ஆப்ஷன்களுடன் தினமும் ஸ்மார்ட் போன்களை வாரி இரைத்து வருகிறது. சூழ்நிலை இப்படியிருக்க, கண்கவரும் ஆப்ஷன்களில் கவனம் செலுத்தும் இந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பில் என்னவோ அவ்வளவு அக்கறை செலுத்துவது மாதிரி தெரியவில்லை.
அந்த விஷயம் ஒரு ஸ்மார்ட்ஃபோன் தொலைந்த பின்னர்தான் நமக்கு தெரியவருகிறது. அதைத்தொடர்ந்து தேடிய போதுதான் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டது என்று ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தினமும் 4 முதல் 5 புகார்கள் வருவதும் அதில் பெரும்பான்மையான போன்கள் வாடிக்கையாளரிடம் திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், தொலைந்த ஸ்மார்ட்ஃபோன்களை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் என்ன?, ஸ்மார்ட் போன் தொலைத்து விட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை சைபர் பிரிவு நிபுணரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் அவர்களிடம் இது குறித்து கேட்டோம்.
இது குறித்து அவர் கூறும்போது, “முதலில் ஒரு போன் காணாமல் போனால், அதனை IMEI (International Mobile Equipment Identity) எண்ணைக்கொண்டு கண்டுபிடிக்கலாம். அதற்கு காணாமல்போன மொபைலில் சிம் ஒன்று இருக்க வேண்டும். அதில் கிடைக்கும் நெட்வொர்க்கை கொண்டுதான் நாம் செல்ஃபோனை கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் போனை காணவில்லை என போலிசிடம் புகார் கொடுக்கும் போது, நீங்கள் எந்த நெட்வொர்க்கை பயன்படுத்துகிறீர்களோ, அதன் நோடல் ஆபிசருக்கு அவர்கள் அந்தப் புகாரை அனுப்பப்படும். பின்னர் அந்த மொபைல் கண்காணிக்கப்படும்.
காணாமல்போன மொபைல் போன் கண்டுபிடிக்கப்படுவது எப்படி?
அதே எண் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் அது இருக்கும் லொக்கேஷனை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதில் இருக்கும் சிம் கார்டு எடுக்கப்பட்டு விட்டால் லொக்கேஷனை கண்டுபிடிக்க முடியாது.
அதேபோல் மொபைலும் ஆனில் இருக்க வேண்டும். ஆனில் இருந்தால் மட்டும் போதாது, போனை கையில் வைத்திருக்கும் நபர், யாராவது ஒருவருக்கு கால் செய்ய வேண்டும் அல்லது போனுக்கு வரும் இன்கம்மிங் காலை எடுக்க வேண்டும். அப்போதுதான் மொபைல் இருக்கும் லொக்கேஷனை கண்டுபிடிக்க முடியும்.
இதுதான் சிக்கல்:
அப்படியே லொக்கேஷன் தெரிந்தாலும், சினிமாவில் காண்பிப்பதுபோல போன் இந்த இடத்தில் துல்லியமாக இருக்கிறது என்ற விவரத்தை தெரிந்து கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, மொபைல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே போலீஸ் எல்லா வீட்டிற்குள்ளும் சென்று சோதனை நடத்திவிட முடியாது. அதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் போலீஸ் அந்த இடத்தில் நின்றுவிடுகிறார்கள். இது மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கு பொருந்தும்.
இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன
1. போன் தொலைந்து போவது.
2. போன் திருடப்படுவது.
போன் தொலைந்து போவதை பொறுத்தவரையில், எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் போனை தொலைத்திருப்பீர்கள். அந்த போன் நேரம் ஆக ஆக முழுவதுமாக சார்ஜ் இறங்கி, ஆஃப் ஆகி கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
போன் திருடப்படுவது பொறுத்தவரை, 7 வருடங்களுக்கு முன்பெல்லாம், போனை திருடும் நபர் ரிச் ஸ்ட்ரீட்டிலோ அல்லது பர்மா பஜாரிலோ கொண்டு விற்று விடுவார். அவர்கள் அந்த போனை ரீசெட் செய்து, வேறு சிம்மை போட்டு உபயோகப்படுத்துவார்கள். அப்போது போலீஸ் அவர்களை ட்ரேஸ் செய்து கண்டுபிடிப்பர்.
ஆனால் இப்போது அப்படியில்லை. போனின் IMEI நம்பரை மாற்றும் சாப்ட்வேர்களை வைத்து அதை மாற்றிவிடுகிறார்கள். அதனால் அதை போலீஸால் ட்ரேஸ் செய்ய முடியாது. இந்த IMEI சாப்ட்வேர்கள் இல்லாத கடைகளில் போன் செல்லும்போது, அவர்கள் ஃபோனின் பாகங்களை பிரித்து விற்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், அதையும் போலீஸால் ட்ரேஸ் செய்ய முடியாது.
நாம் செய்யவேண்டியது என்ன?
மொபைல்ஃபோன் தொலைந்த உடனே நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, மொபைலில் நீங்கள் லாக்இன் செய்துள்ள மெயில் ஐடியை பயன்படுத்தி அதில் இருக்கும் Wipe out ஆப்ஷனை கொண்டு நமது டேட்டா அனைத்தையும் டெலிட் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது ,அதில் இருக்கும் புகைப்படங்களையோ, தகவல்களையோ கொண்டு திருடன் நம்மை மிரட்டுவதில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும். காரணம், அந்த மொபைலை பயன்படுத்தி திருடன் வேறு ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ளலாம். அது போலீசிடம் செல்லும் போது, அவர்கள் போனை மானிட்டர் செய்து உங்களை தேடி வருவர். அப்போது அப்படி செய்தது நீங்கள் இல்லை என்று கூற உங்களிடம் போலீஸ் கொடுத்த ரசீது உதவும்.
அப்படியானால் மொபைல் போன் வாங்குவது பாதுகாப்பானது இல்லையா என்ற கேள்வி எழலாம். இங்கு பலர் போனை வாங்குவது ஆடம்பரத்திற்காக. அந்த ஆடம்பரத்தை தவிர்த்து, தேவை கருதி ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க வேண்டும்.
முன்னெச்சரிக்கையாக, மொபைல் கையில் இருக்கும்போதே அது ஒரு வேளை தொலைந்து போனால் அதனை கண்டுபிடிப்பதற்கான ஆப்களை இன்ஸ்டால் செய்து கொள்வது நல்லது. அதே போல, நீங்கள் போன் தொலைந்து போனால், சைபர் க்ரைம் போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்பதில்லை. பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாலே போதுமானது.” என்றார்.
இதை தவிர்த்து, போனிற்கு இன்சூரன்ஸ் செய்து கொள்வதும் நம்மை பெரிய பொருளாதார இழப்பில் இருந்து காக்கும்