BEACHBOT |”ஆட்டோ ஆட்டோக்காரா! ஆட்டோமெட்டிக் காரா “ - கடற்கரை சுத்தத்தில் அசத்தும் பிபி ரோவர்!
4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகளை அகற்றும் செயல்திறன் இந்த பிபி ரோவருக்கு இருப்பதாக இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது.
பார்ப்பதற்கு என்னவோ செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ரோவர் போல இருக்கும் இந்த இயந்திரம் , செவ்வாய் கிரகத்திற்கு அல்ல , கடற்கரைக்கு சொந்தமானது. ஆமாங்க! இது ஒரு கிளீனிங் ரோவர். பீச் கிளீனிங் பாட் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரோவரை சுருக்கமாக பிபி ரோவர் என அழைக்கின்றனர். முன்னதாக கடற்கரையை சுத்தம் செய்வதற்கு Artificial Intelligence என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட பல ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த ரோபோக்கள் கடற்கரையில் பொதுமக்கள் விட்டுச்செல்லும் பாட்டில்கள், பாலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் , காலணிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உதவுகின்றன. ஆனால் பிபி அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது. கடற்கரை ஓரத்தில் புகைப்பிடித்துவிட்டு , சிகரெட் பட் துண்டுகளை அங்கேயே பலர் வீசி செல்கின்றனர். இது கடலில் கலந்தால் அதன் ரசாயனங்கள் கடல் வளத்தை மெல்ல மெல்ல அழிக்கும் அபாயமும் உள்ளது.
சிகெரெட் துண்டுகள் அளவில் சிறியதாகவும், மணலில் புதைந்தும் இருப்பதால் அவற்றை மற்ற ரோபோக்களால அகற்ற முடிவதில்லை. எனவே சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த புதிய பிபி ரோபோவை களமிறக்கியுள்ளனர் டெக் டிக்ஸ் நிறுவன வடிவமைப்பாளர்களான எட்வின் போஸ் மற்றும் மார்ட்டிஜ் லுகார்ட்.ஹாலந்தின் ஷெவெனிங்கன் கடற்கரையில் குவிந்துக்கிடக்கும் சிகரெட் துண்டுகளை கண்டதும்தான் இவர்களுக்கு பிபி ரோவரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாக தெரிவிக்கின்றனர். image-detection algorithm மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ சிகரெட் துண்டுகள் எந்த அளவில், கோணத்தில், வடிவத்தில் இருந்தாலும் அவற்றை நுட்பமாக கண்டறிந்து களையும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.சுமார் 2.5 அடி அகலமுள்ள இந்த பீச் ரோவர், சிகரெட் துண்டுகளை மணலில் இருந்து இடுக்கி போல இருக்கும் அதன் கைகளால் எடுத்து, மேற்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள ஒரு சேமிப்பு பெட்டியில் வைக்கிறது.
மேலும் மணலில் நகர்ந்து செல்வதற்கு ஏற்ற மாதிரியான பஃப்பி டயர்களை பிபி ரோவர் கொண்டுள்ளது . கிட்டத்தட்ட 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகளை அகற்றும் செயல்திறன் இந்த பிபி ரோவருக்கு இருப்பதாக இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் அவற்றை புகைப்படமாகவும் சேமிக்கும் ஆற்றல் இந்த பீச் பாட்டுக்கு உள்ளது. கிட்டத்தட்ட 2,000 புகைப்படங்கள் வரை இது சேமிக்குமாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ’மைக்ரோசாஃப்ட் ட்ரோவ்’ மூலம் இந்த பீச் ரோவரை கட்டுப்படுத்துகின்றனர். பிபி ரோவர் காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்ற குப்பைகளையும் அகற்றுமா என கேட்டால், நிச்சயமாக அகற்றாது! இது சிகரெட் துண்டுகளை களைய மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக ரோபோ!