Restriction on Import: சோலி முடிஞ்சது..! கணினி, டேப்லெட், லேப்டாப் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு - அரசு அதிரடி
வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்களை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்களை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அதிரடி:
மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் இறக்குமதிக்கு மத்திய அரசு வியாழக்கிழமை கட்டுப்பாடு விதித்துள்ளது என்று, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, HSN 8741 விதியின் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சரியான லைசென்ஸ் பெற்று இருந்தால் மட்டும், மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விலக்கு விவரம்:
அதன்படி, உரிய அனுமதி பெற்று இருப்பவர்கள் ஒரு மடிக்கணினி, கணினி மற்றும் டேப்லெட்டை மட்டும் ஆன்லைன் தளங்கள் உள்ளிட்டவை மூலம் போஸ்டல் அல்லது கொரியர் மூலம் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, R&D, சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, மறுஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக தடை செய்யப்பட்ட பொருட்களின் 20 எண்ணிக்கையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே இந்த விலக்கு வழங்கப்படுவதாகவும், விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு பொருந்தாது?
பழுது பார்ப்பதற்காக வெளிநாட்டில் வழங்கப்பட்ட குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திருத்தப்பட்ட சாமான்கள் விதிகளின் கீழ், இறக்குமதிக்கு மேற்கூறிய கட்டுப்பாடு பொருந்தாது" என்று வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்தில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதியின் மதிப்பு19.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.25% அதிகமாகும் . நாட்டின் மொத்த இறக்குமதியில் மின்னணு சாதனங்களின் இறக்குமதி 7% முதல் 10% வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு:
இந்நிலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியைத் ஊக்குவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் போன்ற தயாரிப்புகளை உள்ளடக்கிய IT வன்பொருள் உற்பத்தியில் பெரு நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்காக, $2 பில்லியன் உற்பத்தி ஊக்கத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.