Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!
பேஸ்புக் விரைவில் ஸ்மார்ட் வாட்ச்சை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று பேஸ்புக். சோஷியல் மீடியா உலகில் புதிய திருப்பத்தை உண்டாக்கிய பேஸ்புக் நாளுக்கு நாள் அப்டேட்டுடன் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என மேற்கொண்டு இரண்டு நிறுவனங்களுமே பேஸ்புக்கிற்கு சொந்தமானவையே. ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் சுற்றுபவர்கள் பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனங்களை தொடாமல் ஒருநாளைக் கடக்க முடியாது என்ற நிலையே வந்துவிட்டது. இதுபோதும் என நின்றுவிடாத பேஸ்புக் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக் விரைவில் ஸ்மார்ட் வாட்ச்சை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் கசிந்த சில தகவலின்படி பேஸ்புக் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை வெளியிட திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடன் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் பேஸ்புக்கின் ஸ்மார்ட் வாட்சில் இரண்டு கேமராக்களை பேஸ்புக் உருவாக்கவுள்ளது. ஒன்று செல்ஃபி கேமராகவும், மற்றொன்று ஃபிரேம்களில் பொருத்தப்பட்டு வீடியோ எடுக்கும் வசதியில் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச் என்பதால் எடுக்கப்படும் வீடியோ, புகைப்படங்களை நேரடியாக பேஸ்புக், இன்ஸ்டாவில் பதிவேற்றும் வசதியையும் பேஸ்புக் உருவாக்கும் எனத் தெரிகிறது. இதற்காக தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் பேஸ்புக் கைகோத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் AR glasses உடன் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. இதற்காக பேஸ்புக் நிறுவன, ரேபான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த வாட்ச் கருப்பு, வெள்ளை, தங்க நிறங்களில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வழக்கமான சிறப்பம்சமான இதய துடிப்பை துல்லியமாக அறியும் வசதி இந்த ஸ்மார்ட் வாட்சில் கொடுக்கப்படும் என தெரிகிறது.
2022ம் ஆண்டு தன்னுடைய ஸ்மார்ட்வாட்சை பேஸ்புக் வெளியிடும் என தகவல் வெளியாகி இருந்தாலும் இதுவரை பேஸ்புக் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் வாட்ச் வந்தால் இதன் விலை கிட்டத்தட்ட ரூ.29000 இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஸ்மார்ட்வாட்ச் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இந்த விலையில் இந்தியாவில் அறிமுகமானால் பேஸ்புக்கின் ஸ்மார்ட்வாட்ச் ஒரு ஓட்டம் ஓடுமா என்பது கேள்விக்குறியே. இந்திய சந்தையானது பட்ஜெட் சந்தை. எந்த பொருளாக இருந்தாலும் பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட தரத்துடன் கொண்டு வரப்பட்டால் அந்த பொருள் விற்பனையில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதே வியாபார கணக்கு. இந்திய சந்தையை மனதில் கொண்டு பேஸ்புக் களம் இறங்குமா? அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளின் எலைட் மக்களுக்கு வைக்கப்பட்ட குறியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பட்ஜெட் மொபைல் ப்ளானா? அலப்பறையே இல்லாமல் வெளியானது புது ரியல்மி ஃபோன்!