Facebook New Name Meta: ‛பேஸ்புக்’ பெயர் மாறியது... இனி ‛மெட்டா’ என்கிற பெயரில் இயங்கும்... மாற்றம் ஏன்?
Facebook Change Name to Meta: இத்திட்டத்திற்கான ஆரம்ப நிலையிலேயே ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது பேஸ்புக். மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரை புதிதாக பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கசிந்த தகவல் தான். ஆனால் அதை மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்தால் மட்டுமே உண்மை என்கிற நிலையில் இருந்தது. அது உறுதியானது. ஆம்... பேஸ்புக் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அனைவர் கைகளிலும் தவிர்க்க முடியாத குழந்தையாய் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக் தனது பெயரை மாற்றியுள்ளது. ஏன் இந்த மாற்றம்... காரணம் என்ன... புதிய பெயர் எதனால் என்பதை பார்க்கலாம்.
‛மெட்டா’ (Meta) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பேஸ்புக்,. மெய்நிகர் உலகம் அல்லது விரிச்சுவல் உலக நோக்கு உருவாக்கப் போவதாக அறிவித்தார் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க். பேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு அதன் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் தலைமையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்று பேசிய அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Announcing @Meta — the Facebook company’s new name. Meta is helping to build the metaverse, a place where we’ll play and connect in 3D. Welcome to the next chapter of social connection. pic.twitter.com/ywSJPLsCoD
— Meta (@Meta) October 28, 2021
‛‛இதுவரை சமூகம் சார்ந்த விவகாரங்களில் கற்றுக் கொண்டிருக்கிறோம். இதனால் கிடைத்த அதிக பாடங்களை வைத்து அடுத்த கட்டத்தை உருவாக்கியுள்ளோம். எங்களின் அப்ளிகேஷன்கள் மற்றும் அதன் பிராண்டுகள் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நொடி முதல் மெட்டாவெர்ஸ் தான் எங்களின் முதல் இலக்கு, தவிர பேஸ்புக் அல்ல,’’ என்று அவர் பேசினார்.
மாற்றப்படும் இத்திட்டத்திற்கான ஆரம்ப நிலையிலேயே ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது பேஸ்புக். மேலும் கூடுதலாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரை புதிதாக பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், ஓக்குலஸ் ஆகியவை செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் பேஸ்புக் நிறுவனம் விஷூவல் ரியாலிட்டி(VR), ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெடாவெர்ஸ் என்கிற இணைய மாய உலகம் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி மெடாவெர்ஸில் ஒருவரிடம் இருந்து மற்றொருவரை மிக எளிதாக தொடர்பு கொள்ள முடியும். 2016ல் தனது சந்தையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் ஆல்பபெட் என்கிற நிறுவனத்தை தொடங்கியது. இப்போது அதே பாணியில் பேஸ்புக் நிறுவனம் மெட்டாவை தொடங்கியுள்ளது. சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‛மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பியிருப்பதும், அதன் காரணமாக பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பெயர் மாற்றம்!
பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயரை மாற்றுவது இது புதிதல்ல. ஏற்கனவே ‛தி பேஸ்புக்’ என்றிருந்த பெயரை பேஸ்புக் என மாற்றினார் மார்க். இந்நிலையில் தான் பேஸ்புக் என்கிற பெயரும் தற்போது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் பிரபலமான நிறுவனம் என்பதால், அதன் புதிய பெயரும் விரைவில் பிரபலமாகும் என்று தெரிகிறது.