தேனீக்கள் மூலம் கொரோனா கண்டறிதலா? நெதர்லாந்து ஆய்வாளர்களின் முயற்சி..
தேனீக்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 95 சதவீதம் துல்லியமான விகிதத்தை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் 2 வது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இதனை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை, சிடி ஸ்கேன் உள்ளிட்டவைகள் தற்போது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதிலும் லேசான அறிகுறி உள்ளவர்களை துல்லியமான திறனுடன் கண்டறிய முடியவில்லை. ஆனால் தேனீக்களால் கொரோனா தொற்றினை கண்டறிய முடியும். யாராலும் யுகித்துக்கூட பார்க்க முடியாத இந்த ஆய்வினை நெதர்லாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பூச்சியியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 150-க்கும் மேற்பட்ட தேனீக்களுக்கு கொரோனா தொற்றினை கண்டறிவதற்கான பயிற்சியினை வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொடிய கொரோனா வைரசினை எவ்வாறு தேனீக்கள் கண்டறியும் என்ற விளக்கத்தினையும் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த சூழலில் எந்த வகையில் கொரோனா தொற்றினை கண்டறிய தேனீக்கள் உதவியாக இருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்த தகவல்களை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தின்படி, தேனீக்கள் ஒரு டிரில்லியனுக்கு ஒரு பாகத்தின் உணர்திறன் கொண்ட ஆவியாகும் தன்மையைக் கண்டறிய முடியும் உன தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசனையை விரைவில் உணரும் திறன் காரணமாக தேனீக்கள் ஒரு சில நிமிடங்களில் ஆவியாகும் மற்றும் நாற்றங்களைக் கண்டறிய பயிற்சியளிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இதற்காக பாவ்லோவியன் கண்டிஷனிங் முறையைப் பயன்படுத்தி, தேனீக்கள் SARS-CoV-2 பாதிக்கப்பட்ட மாதிரிகளைக் கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும், ஒரு தேனீக்கு கொரோனா பாசிட்டிவ் மாதிரியிலிருந்து வாசனை செலுத்தப்படும் அதற்கு சர்க்கரை நீர் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் அவற்றுக்கு நோய்த்தொற்று இல்லாத மாதிரியைப் பற்றிக் கொள்ளும்போது, அவற்றுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறாக பயிற்சி அளிக்கப்படும்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வாசனையை வைத்து தேனீக்கள் கண்டறிந்து விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த முறையினை தற்போது உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்தில் பல முறை 150-க்கும் மேற்பட்ட தேனீக்களுடன் ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தேனீக்களின் அடுத்தக்கட்ட அணுகுமுறை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக இன்செக்சென்ஸ் வைரஸைக் கண்டறிய தேனீக்களைப் பயிற்றுவிக்கக்கூடிய ஒரு முன்மாதிரி இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் எல்லா ஆய்வகங்களிலும் எளிதில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாகனிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தேனீக்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கப்பெறும் என்பதால் நிச்சயம் இந்த முயற்சி வெற்றி பெறும் எனவும் தெரிவித்துவருகின்றனர். ஒரு கொரோனா சோதனைக்கு பல தேனீக்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 95 சதவீதம் துல்லிய விகிதத்தை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்