Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
Airtel AI: ஒவ்வொரு நாளும் 10 கோடி ஸ்பேம் அழைப்புகளை வெற்றிகரமாக அடையாளம் காண முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் ஸ்பேம் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் முன்னோடி நடவடிக்கையாக பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) இன்று இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான AI- ஆற்றல்பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும்.
ஸ்பேம் எச்சரிக்கை:
நாட்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதன் முதலாக இந்தத் தீர்வை ஏர்டெல் வழங்குகிறது. இந்தக் கருவி நிகழ்நேரத்தில் சந்தேகத்திற்குரிய அனைத்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS கள் குறித்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்தத் தீர்வு இலவசமாக அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை கோரிக்கையை எழுப்பாமலேயே அல்லது செயலியைப் பதிவிறக்காமலேயே தானாகவே செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறும்போது, “வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் ஓர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பன்னிரண்டு மாதங்களாக இதை முழுமையாகத் தீர்ப்பதற்காக எங்கள் முயற்சியை செலவிட்டோம். நாட்டின் முதல் AI-ஆற்றப்பெற்ற ஸ்பேம் இல்லாத நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியதில் இன்று இது ஒரு சாதனையாக அமைகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தேவையற்ற தகவல் தொடர்புகளின் தொடர்ச்சியான தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்” என்றார்.
"இரட்டை அடுக்கு கொண்ட பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தீர்வில் இரண்டு ஃபில்ட்டர்கள் உள்ளன: ஒன்று நெட்வொர்க் அடுக்கில் இருக்கிறது. இரண்டாவது ஐடி சிஸ்டம்ஸ் அடுக்கில் உள்ளது. ஒவ்வொரு அழைப்பும், SMS களும் இந்த இரட்டை அடுக்கு AI கவசம் வழியாகச் செல்கிறது. 2 மில்லி விநாடிகளில் எங்கள் தீர்வு ஒவ்வொரு நாளும் 100 கோடி செய்திகளையும் 250 கோடி அழைப்புகளையும் செயல்முறைப் படுத்துகிறது. AI இன் ஆற்றலைப் பயன்படுத்தி நிகழ்நேர அடிப்படையில் 1 லட்சம் கோடி பதிவுகளைச் செயலாக்குவதற்கு இது சமம்.
10 கோடி ஸ்பேம் அழைப்புகள்:
ஒவ்வொரு நாளும் 10 கோடி ஸ்பேம் அழைப்புகளையும் 30 லட்சம் ஸ்பேம் SMS களையும் எங்கள் தீர்வால் வெற்றிகரமாக அடையாளம் காண முடிகிறது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்” என்று விட்டல் மேலும் கூறினார்.
ஏர்டெல்லின் தரவு விஞ்ஞானிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ள்ள AI-ஆற்றல்பெற்ற இந்தத் தீர்வு, அழைப்புகள் மற்றும் SMS களை "சந்தேகத்திற்குரிய ஸ்பேம்" எனக் கண்டறிந்து வகைப்படுத்த காப்புரிமை பெற்ற அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது. அதிநவீன AI அல்காரிதம் மூலம் இயங்கும் நெட்வொர்க், அழைப்பாளர் அல்லது அனுப்புநரின் பயன்பாட்டு முறைகள், அழைப்பு/SMS அதிர்வெண், அழைப்பின் கால அளவு போன்ற பல்வேறு அளவுருக்களை நிகழ் நேர அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது. ஏற்கெனவே அறியப்பட்ட ஸ்பேம் பேட்டர்ன்களுக்கு எதிராக இந்தத் தகவலை கிராஸ் ரெஃபரன்சிங் மூலம் சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS களாக சிஸ்டம் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.
பாதுகாப்பு:
சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் தற்செயலாக கிளிக் செய்வதில் இருந்து பயனர்களை எச்சரிப்பதற்காக அதிநவீன AI அல்காரிதம் மூலம் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் (SMS) நிகழ்நேரத்தில் ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்தத் தீர்வால் அடிக்கடி ஏற்படும் IMEI மாற்றங்கள் போன்ற முரண்பாடுகளைக் கண்டறிய முடியும். இது மோசடி செயல்பாட்டின் பொதுவான குறிகாட்டியாகும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுக்கடுக்காக அமைப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஸ்பேம் மற்றும் மோசடி அச்சுறுத்தல்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுவதை நிறுவனம் உறுதி செய்கிறது என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.