Aadhaar Update | ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் இதுதான்.. அதிகம் கேட்டால் என்ன செய்யலாம்? - முழு விவரம்!
ஆதார் திருத்தங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக யாரேனும் வசூலித்தால் 3 முறைகளில் புகார் அளிக்கலாம்.
ஆவணங்களிலேயே முக்கியமானதாக இருக்கிறது ஆதார். எதாவது ஒரு தேவைக்காக அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களையோ அணுகினால் அவர்கள் முதலில் கேட்கும் ஆவணமும் ஆதார் தான். இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. தேர்தலில்கூட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைரேகை, கருவிழி, வீட்டு முகவரி என ஆதாரில் நம்முடைய வரலாறே கிடைத்துவிடும்.
இவ்வளவு முக்கியமான ஆதாரை அனைவரும் கையில் வைத்திருப்பது மிக முக்கியம். மிக முக்கிய தேவையாக இருப்பதால் ஆதாரைப் பெறவும், அதில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும் பலரும் முயற்சி செய்கிறார்கள். திருமணம், வீடு மாற்றம் ஏற்பட்டால் ஆதார் கார்டில் முகவரி, பெயர் மாற்ற வேண்டி வரும். இதனை டெமோகிராபிக் அப்டேட் என்கிறோம். இந்த மாற்றங்கள் செய்ய ரூ.50 வசூலிக்கப்படும். இணையத்தில் நாமகவே ssup பக்கத்திற்கு சென்று சில திருத்தங்களை செய்யலாம். ஆனால் அதற்கு உங்கள் ஆதாருடன் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.
சில நேரம் ஆதார் சேர்க்கையின் போது பிழைகள் ஏற்படும். புகைப்படம், விரல் ரேகை, பாலினம் உள்ளிட்ட பிழைகள் ஏற்படலாம். இதுமாதிரியான பிழைகளை திருத்தம் செய்வது பயோமெட்ரிக் அப்டேட் ஆகும். இதற்கான கட்டணம் ரூ.100. மற்றபடி புதிய ஆதார் அப்ளை செய்வதற்கோ, பெறுவதற்கோ பணம் கட்டத்தேவையில்லை. ஒருவேளை மேலே சொன்ன கட்டணத்தை விட அதிகமாக யாரேனும் வசூலித்தால் 3 முறைகளில் புகார் அளிக்கலாம்.
1.1947 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்
2.help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகாரை அனுப்பலாம்
3.resident.uidai.gov.in/file-complaint என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று நேரடியாக உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
இணையத்தில் புகார் அளிப்பது எப்படி?
1. https://resident.uidai.gov.in/file-complaint என்ற பக்கத்திற்கு நேரடியாக செல்லலாம்.
2.பின்னர் 14 இலக்க EID எண்ணை பதிவிட வேண்டும். தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்
3.பெயர், செல்போன் எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்
4.உங்கள் இமெயில் ஐடி, பின்கோடு மற்றும் இன்னும் சில விவரங்களை கொடுக்க வேண்டும்
5.புகாரை குறிப்பிட்டு எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
6.புகாரை தெளிவாக குறிப்பிட வேண்டும்
7.கேப்ஜா (captcha)வை பதிவிட வேண்டும்
8.சப்மிட் பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்படும்
இனி இவற்றைப் பின்பற்றி அப்டேட் செய்து கொள்ளுங்கள்! தேவையற்ற பண விரயத்தை தவிர்க்கலாம். முறையான வழிமுறைகளின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.