Koo | கிடைத்த கேப்பில் எல்லாம் கெடா வெட்டும் 'கூ' ஆப்.. 16 மாதத்தில் அதீத வளர்ச்சி!
இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளில் ட்விட்டர் எதாவது சறுக்குகிறது என தெரிந்தால் ஓடிப்போய் சீட்டு போட்டு விடுகிறது கூ.
ட்விட்டரைப் போன்று களம் இறங்கியது இந்திய செயலியான 'கூ இந்தியா'. ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான அப்ரமேய ராதாகிருஷ்ணா கடந்த வருடம் பெங்களூருவில் தனது நண்பர் மயங்க்குடன் ’கூ’ சமூகவலைத்தளத்தைத் தொடங்கினார். பொது முதலீட்டில் உருவான ’கூ’ தளத்துக்கு மெல்ல மெல்ல ஆதரவு அதிகரித்து வந்தது. குறிப்பாக கூ செயலி ஆளும் பாஜக அரசால் அதிகம் முன்னெடுத்து கொண்டு செல்லப்பட்டது.
கூ தொடங்கப்பட்டதுமே மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் ட்விட்டருக்கு எதிராக இதனைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதே சமயம் ஆளும் அரசுடன் ட்விட்டர் தளம் தொடர்ந்து முட்டல் மோதலில் இருந்து வரும் நிலையில் இதனை வாய்ப்பாகக் கொண்டு இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றான உள்ளூர் உற்பத்தியாக கூ பாரதிய ஜனதாவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடங்கப்பட்ட போது, அடுத்த இரண்டு வருடங்களில் 100 மில்லியன் பயனாளர்கள் என்பதே தங்கள் இலக்கு என அந்த நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் அதனை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது கூ.
தொடங்கப்பட்ட 16 மாதங்களில் சுமார் 10 மில்லியன் பயனாளர்களை கடந்து வேகமாக முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது கூ. லேட்டாக வந்தாலும் விறுவிறுவென பயணிக்கும் கூ ட்விட்டர் இந்தியாவுக்கே சவாலகவே உருவெடுத்து வருகிறது. ஆங்கிலம் உள்ளிட்ட 7 மொழிகளில் பதிவிடலாம் என்ற பல சிறப்பம்சங்களை கூ கொண்டுள்ளது.
ஐபோன் 12ல் இப்படி ஒரு பிரச்னையா? சரி செய்து தருவதாக சொல்லும் ஆப்பிள் - விவரம்!
ட்விட்டர் சறுக்கும் இடத்திலெல்லாம் கூ ஸ்கோர் செய்து விடுவதே அதன் அதீத வளர்ச்சிக்கு காரணமென கூறப்படுகிறது. குறிப்பாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் அதற்கு மாற்றாக கூ வை அரசு சார்ந்த ஆட்களே விளம்பரம் செய்தனர். இது தனிப்பட்ட கட்சி சார்பான போட்டியில் அக்கட்சிக்கு ஆதரவாக இருந்ததால் இது அதிவேகமெடுத்து முன்னேறி செல்கிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய அரசின் புதிய ஐ.டி. விதிகள் தொடர்பான பிரச்னை வந்தபோது வேகமாக முன்னால் ஓடிவந்த கூ, தாங்கள் ஐடி விதிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளில் ட்விட்டர் எதாவது சறுக்குகிறது என தெரிந்தால் ஓடிப்போய் சீட்டு போட்டு விடுகிறது கூ. கடந்த ஜூன் மாதம் நைஜீரிய அரசு அமெரிக்காவின் ட்விட்டர் தளத்தைத் தனது நாட்டில் முடக்கியது. நைஜீரிய நாட்டு அதிபர் முகமது புகாரியின் கணக்கில் பதிவிட்ட ட்வீட் ஒன்று ட்விட்டர் விதிகளுக்குப் புறம்பானதாக இருப்பதாகச் சொல்லி அதனை நீக்கியது ட்விட்டர். இதையடுத்து,அந்தத் தளத்தையே தற்காலிகமாக முடக்கியது நைஜீரிய அரசு. உடனடியாக நைஜீரியச் சந்தையில் தனது விளம்பரத்தைத் தொடங்கியது கூ. நைஜீரிய அரசு அதிகாரிகள், உள்ளூர் கலைஞர்களை நாடியது கூ. நைஜீரியாவின் உள்ளூர் மொழியிலும் நாங்கள் சேவை செய்யத் தயார் என களமிறங்கியது கூ. இப்படி கிடைத்த கேப்பில் எல்லாம் கெடா வெட்டும் கூ விரைவில் ட்விட்டரை முந்திச் செல்வதையே நோக்கமாக கொண்டுள்ளது.
விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும் எறும்பு, ரோபோட் கை.. ஏன் தெரியுமா?