ஐபிஎல் இன்றைய போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் மோதல்: சாதகம் யாருக்கு யார்?
ஐபிஎல் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் இன்று சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நடப்பு தொடரின், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய தெம்புடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ராஜஸ்தான். இதனால், இன்றைய போட்டியில் இரு அணிகளும் பெரும் உற்சாகத்துடனேயே விளையாடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான், பிரிதிவ் ஷா சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதனால், இன்றைய போட்டியில், இவர்களை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும். ரிஷப் பன்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட் மேயர் ஆகியோரும் நல்ல ஃபார்மிலேயே இருக்கின்றனர். கடந்த போட்டியில் சோபிக்காத ரஹானே, இன்றைய ஆட்டத்தில் தன்னை நிரூபிக்க முயற்சி செய்வார். பவுலிங்கில், வோக்ஸ், அஸ்வின், டாம் குரான் ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை திணரவைத்தால், டெல்லி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ருசிக்கலாம்.
ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ரியான் பராக் கடந்த போட்டியில் காட்டிய அதிரடி ஆட்டத்தை, இன்றையப் போட்டியிலும் தொடங்குவார்கள். பென் ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவரது பேட்டிங் இடத்தை டேவிட் மில்லர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஐபிஎல் தொடரில் பேசப்பட்ட ராகுல் திவேட்டியா இன்று அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிகர் ரஹ்மான், சக்கரியா பவுலிங்கில் டெல்லியின் ரன் வேகத்தை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தினால், அணிக்கு நல்லது.
தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் டெல்லி அணியும், நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் அணியும் இருப்பதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.