ICC Womens World Cup 2022: மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !
மார்ச் மாதம் தொடங்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் மித்தாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்தில் நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியும் சேர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு தொடர்களிலும் விளையாட உள்ள இந்திய மகளிர் அணியின் விவரம்:
மித்தாலி ராஜ் (கேப்டன்),ஹர்மன்பிரீத் கவுர்(துணை கேப்டன்),ஸ்மிருதி மந்தானா,ஷாஃபாலி வர்மா,யாஸ்டிகா பாட்டியா, தீப்தி சர்மா,ரிச்சா கோஷ்,தானியா பாட்டியா, ஜூலன் கோசாமி, பூனம் யாதவ், சினேஹ் ரானா, பூஜா,மெகனா சிங் தாகூர், ராஜேஸ்வரி கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து எக்தா பிஸ்ட், சிம்ரன் தில் பகதூர் மற்றும் சபினேனி மேக்னா ஆகியோர் ரிசர்வ் வீராங்கனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் அனுபவ வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பெறவில்லை.
🚨 NEWS 🚨: India Women’s squad for ICC Women’s World Cup 2022 and New Zealand series announced. #TeamIndia #CWC22 #NZvIND
— BCCI Women (@BCCIWomen) January 6, 2022
More Details 🔽https://t.co/qdI6A8NBSH pic.twitter.com/rOZ8X7yRbV
முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டிருந்தது. அதன்படி இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியை மார்ச் மாதம் 6ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதைத் தொடந்து 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. முதல் சுற்று போட்டிகளுக்கு பிறகு 30,31ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனவே இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரை கோப்பையுடன் இந்திய அணி வழி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரசிகர் கனவுகளின் விஸ்வரூபம்.. இலக்கை நனவாக்கிய உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ்..!