Kapil Dev Birthday | ரசிகர் கனவுகளின் விஸ்வரூபம்.. இலக்கை நனவாக்கிய உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ்..!
அவர்களை எதிர்த்து வெற்றி பெறவே முடியாதா என்று எண்ணம் அனைவருக்கும் இருந்திருக்கிறது. அப்போதுதான் அதை மாற்றவந்தவரைப் போல் இந்திய அணிக்குள் நுழைந்தார் கபில்தேவ்.
ஜனவரி 6, 1959-ஆம் ஆண்டில் சண்டிகர், பஞ்சாபில் பிறந்த இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும். 1970- களின் ஹரியானா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார் கபில்தேவ். பல தடைகளை தாண்டி அந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால், அதை வைத்து டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்று விடலாம் என்று நம்பினார்.
ஆனால் அணிக்குள் வருவதற்கு பல எண்ணற்ற போராட்டங்களை கடந்து வர வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. அதையும் கடந்து போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ். பின்னர் நடைபெற்ற தொடரில் சிறப்பாக ஆட அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகார பூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். இதில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார். நாம் யாரிடம் வெற்றிபெற மாட்டோம் என நினைத்தோமோ அவர்களிடம் பெற்று சிறப்பான அணியாக உருவெடுத்தது இந்திய அணி.
பின்னர் கபில்தேவ் இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைவர் பொறுப்பு ஏற்றார். இந்தத் தொடரில் சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவருக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முழுமைக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
1983 உலகக் கோப்பை அணியில் இருந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், கபில் தேவ் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே `நம்மால் உலகக் கோப்பை வெல்ல முடியும்’ என உறுதியாக நம்பினார் என்று. அதீத நம்பிக்கைக்குக் காரணம் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியதுதான். 1983 உலகக் கோப்பை லீக் சுற்றிலும் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. ஆனாலும், உலகக் கோப்பை போட்டிகளை கவர் செய்ய இங்கிலாந்து சென்ற இந்திய நிருபர்களே, மேற்கு இந்திய அணி இந்தியாவைத் தோற்கடித்து விடும் என்று இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணி, ஜிம்பாப்வே உடன் துவக்க பேட்டர்கள் மோசமாக விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் கபில் தேவ் களமிறங்கிய சில நிமிடங்களில் அடுத்த விக்கெட் விழுந்தது. இறுதியில் பந்துவீச்சாளார்களுடன் ஜோடி சேர்ந்து போராடினார் கபில் தேவ். அடித்து ஆடக் கூடியவர், அன்று அவர் அப்படியில்லை. நிதானமாக இருந்தார். அடித்து ஆடுவதை விட ஒன்று, இரண்டு என ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதிலேயே கவனமாக ஆடி சதம் அடித்தார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். அந்தச் சாதனை 14 ஆண்டுகள் நீடித்தது. கபில் தேவ் 175 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இந்தியாவுக்கு 266/8 ரன்கள் எடுக்க போராடி அப்போட்டியில் வெற்றிபெற வைத்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி மட்டுமே காத்திருத்து. தொடர்ந்து லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இறுதிப்போட்டியில் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையையும் கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட்டின் அந்தஸ்து அதிகமாக உயர்ந்தது என்றே கூறலாம். இதையடுத்து 1987ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியுற்றது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, இதையடுத்து மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவை கபில் எடுத்தார். இதையடுத்து கடந்த 1994ல் அவர் ஓய்வு பெறும்வரை கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை. தான் ஓய்வு பெற்ற போது டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு விதை போட்ட ஐ.சி.எல் (இந்தியன் கிரிக்கெட் லீக்)என்ற கிரிக்கெட்டை தொடங்கி வைத்தவர் கபில்தேவ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.