‛கனா’ தியேட்டரில் பார்த்தீங்களா...? நேர்ல பாருங்க பாஸ்... தமிழ்நாடு கிரிக்கெட்டில் மிட்டாய் வியாபாரி மகள்!
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வாகியுள்ளார் கரூரைச் சேர்ந்த செல்சியா.
சாதனை செய்ய மனம் மட்டும் தான் வேண்டும் என்பதை செல்சியா போன்றோர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வாகியுள்ளார் கரூரைச் சேர்ந்த செல்சியா.
செல்சியாவின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம். செல்சியாவின் தந்தை ஜான்பீட்டர் தேங்காய் மிட்டாய் வியாபாரம் செய்கிறார். தாய் கிரேஸிரெஜினா இல்லத்தரசி. செல்சியா கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் சிஏ மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவருக்கு இளம் வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம்.
சிவகார்த்திகேயனின் கனா படத்தில் வரும் முருகேசனைப் போல் ஜான்பீட்டரும் மகள் செல்சியாவின் கனவுக்கு துணையாக இருந்துள்ளார். பள்ளிக் காலத்திலேயே செல்சியா கிரிக்கெட்டில் தனிச்சிறப்பாக தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துள்ளார். பள்ளி முடிந்ததும் கிரிகெட் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். பள்ளி முடிந்து கல்லூரியில் சேர்ந்த பின்னரும் கூட கிரிக்கெட்டைக் கைவிடவில்லை. தனது குடும்பத்தினரும் கல்லூரி ஆசிரியர்களும் நண்பர்களும் தன்னை தொடர்ந்து ஊக்குவிப்பதாக செல்சியா தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் சேர்ந்தவுடனேயே அரவக்குறிச்சி அருகே உள்ள உடற்கல்வி ஆசிரியர் யுவராஜிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக சேர்ந்தார். தினமும் பயிற்சி அடிக்கடி போட்டிகள் எனத் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். இப்போது தமிழக அணிக்கு தேர்வாகி உள்ளார்.
இது குறித்து அவர், தமிழக கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக எனது சொந்த மாவட்டத்துக்கும் நற்பெயர் பெற்றுக் கொடுப்பேன் என்று செல்சியா கூறியுள்ளார். செல்சியா தன்னை ஒரு ஆல்ரவுண்டராக தகுதிப்படுத்தி வருகிறார். அவர் பவுலிக்கிலும், பேட்டிங்கிலும் பயிற்சி எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.